சென்னையைச் சேர்ந்த `குளோபல் பார்மா ஹெல்த்கேர்’ நிறுவனம் தயாரித்து, அமெரிக்கச் சந்தைக்கு விநியோகித்துள்ள செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்து, எஸ்ரிகேர் (EzriCare).
`இம்மருந்து drug-resistant பாக்டீரியாவால் மாசுப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துகையில், நிரந்தர பார்வை இழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உண்டாகும் தொற்று காரணமாக இறப்பு ஏற்படலாம்’ என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
`எனவே எஸ்ரிகேர் ஆர்டிபிசியல் கண் சொட்டு மருந்து அல்லது டெல்சம் பார்மாவின் செயற்கை கண் சொட்டு மருந்தை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம்’ என அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.
அதே சமயம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
எஸ்ரிகேர் செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிசோதித்து வருகிறது.
’குளோபல் பார்மா ஹெல்த்கேர்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தியமான மாசுபாடு காரணமாக, எஸ்ரிகேர் ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் கண் சொட்டு மருந்து, அல்லது டெல்சம் பார்மா மூலம் அனைத்து இடங்களிலும் விநியோகிக்கப்படும் மருந்துகளை தானாக முன்வந்து திரும்பப் பெறுகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளது.