புதுடெல்லி: இந்திய ரயில்வே நிர்வாக சேவை (ஐஆர்எம்எஸ்) பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஏஎஸ் (குடிமைப் பணி) தேர்வுக்கு இணையாக தனித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த டிசம்பரில் ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.
இந்த சூழலில் ஐஆர்எம்எஸ் தேர்வு திட்டம் கைவிடப்பட்டு ரயில்வே துறை நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், “இந்திய ரயில்வே நிர்வாகப் பணிக்கு யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப் பணித் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, ‘‘குடிமைப் பணி (ஐஏஎஸ்) தேர்வெழுதும் பலர், பொறியியல் பட்டதாரிகள் என்பதால் அவர்களையே ஐஆர்எம்எஸ் சேவை பணிகளிலும் நியமிக்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதை கருத்தில் கொண்டே குடிமைப் பணி தேர்வு மூலம் ஐஆர்எம்எஸ் பணிக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய அறிவிப்பு மூலம் இனிமேல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் பதவியிலும் ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தன.