சசிகலா முகத்தில் அவ்வளவு நம்பிக்கை: இணைப்பு நடக்கப் போகுதாம்!

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் சென்னை மெரீனாவில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் இன்று மதியம்
சசிகலா
தனது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் சொன்னதை மனதில் வைத்து நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது போல் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வார்த்தையை தான் இப்போதும் சொல்கிறேன். எப்போதும் சொல்வேன்.

அதிமுக இணைப்புக்கு மிக அருகில் நெருங்கி விட்டோம். தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது தான் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை நான் சொல்வது. ஒன்றிணையும் சூழ்நிலை வந்துவிட்டது என்பது எனக்கு தெரிகிறது. இடைத்தேர்தலில் என்னுடைய நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறினார்.

கலைஞர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பது தொடர்பாக பேசிய சசிகலா, “கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதை நான் எதிர்க்கிறேன். அதற்கு காரணம் கடலுக்குள் சென்று அதை செய்வது நல்லது இல்லை. இது மீனவர்களை பாதிக்கும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். அப்படி நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் கருணாநிதியின் சமாதியில் நினைவு சின்னத்தை வைக்கலாம்.

பேனா நினைவுச் சின்னத்தை இத்தனை அடி உயரத்தில் தான் வைக்க வேண்டும் என்பது கணக்கில்லை. தமிழ்நாட்டின் நிதி நிலையை பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். மக்களுக்கு பயன்படும் திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைக்கிறார்கள். கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி இருக்கிறார்கள். அப்படியென்றால் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு மட்டும் ரூ.87 கோடி நிதி எங்கிருந்து வருகிறது” என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.