பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கடந்தாண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சென்னை உயர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை வழங்கியது. இதனை அடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றம் கொடுத்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இருப்பினும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளுக்காக சவுக்கு சங்கரை சென்னை மத்திய சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை, கடந்தாண்டு நவம்பர் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள சவுக்கு சங்கர் திமுக அரசை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். சிறைக்கு செல்வதற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளை குறித்தும் கலவையான கருத்துக்களை கூறி வந்த சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்து திமுகவை டார்கெட் செய்து வருவது தெரிகிறது.
இந்த நிலையில், ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் சவுக்கு சங்கர் தமிழக அரசை குறித்தும், அரசு அதிகாரிகளை குறித்தும் பரபரப்பான தகவல்களை பதிவிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ,ஓசூர் அருகே கோப சந்திரம் பகுதியில் சின்ன திருப்பதி கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருது விடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது. அதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் சவுக்கு சங்கர் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற அனைத்து விலங்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், எவ்வித கோரிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ரேஞ்ச் டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களுடன் கலந்துரையாடி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு மார்ச் இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் ஓசூரில் நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழக காவல்துறை, ” இது முற்றிலும் தவறான தகவல். அத்தகைய சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.
தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வரும் சவுக்கு சங்கர் அண்மையில் முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்திருந்தார். மேலும், ஆளுநர் ரவியை சந்தித்தும் புகார் மனுவை வழங்கினார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் இத்தனை நாட்கள் அரசுக்கு தொடர்பான தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் ஓசூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுதிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவறான தகவலை பரப்பியிருந்தால் அவர் மீது காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.