சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி சனிக்கிழமை திறப்பு

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை (பிப்.4) திறந்து வைக்கிறார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதியை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு, பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை (பிப்.4 ) திறந்து வைக்கிறார்.

6 அடுக்குகள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் வசதி 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இதில் 2 ஆயிரத்து 150 கார்களை நிறுத்த முடியும். இருசக்கர வாகனங்களுக்கு தனி இடமும் உள்ளது. இந்த வாகன நிறுத்துமிட வளாகத்தில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையங்கள், உணவு விடுதிகள் சில்லரை வணிகக் கடைகள், சிறுவர்கள் விளையாடும் இடங்கள் உள்பட பல்வேறு வணிக வசதிகளும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் 4-வது முனைய பகுதியில் திறப்புவிழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு, சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.