நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி

காமெடியனாகவும், காமெடி ஹீரோவாகவும் நடித்து வந்த ஆர்ஜே.பாலாஜி முதன் முறையாக சீரியசான கதை நாயகனாக நடித்துள்ள ரன் பேபி ரன் படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை மலையாள இயக்குனர் இயக்கி உள்ளார்.

இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி அளித்துள்ள பேட்டி வருமாறு: நான் எல்.கே.ஜி படம் ஆரம்பிக்கும்போது முதலில் அரசியல், அடுத்து ஆன்மீகம், அடுத்து பொருளாதாரம், கல்வி இப்படி போகலாம் என்று தான் தோன்றியது. எனக்கும் அப்படித்தான் பிடிக்கும். யூகிக்கும் வகையிலான படங்கள் இனிமேல் பண்ணக் கூடாது. பார்வையாளர்களுக்கு முன் நான் விழிப்புணர்வாக இருந்தால்தான் உடனே மாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்திருக்கும்போது தான் ரன் பேபி ரன் பட வாய்ப்பு வந்தது.

ஆர்.ஜே.பாலாஜியா? இவர் எப்போதும் நகைச்சுவை படம்தான் எடுப்பார் என்று எண்ணும்படி இருக்கக் கூடாது. என்னை நாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஆர்.ஜே.பாலாஜி படம் என்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம்தான் வரவேண்டும். இந்த கதை கேட்கும்போது அதுதான் தோன்றியது. ஒரு வருடம் முன்பு, நான் கதை கேட்கும் முன்பே படப்பிடிப்பிற்கு செல்லும் அளவு அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்த கதை கேட்டு பிடித்து சம்மதம் சொன்னதும் படப்பிடிப்பிற்கு சென்று விட்டோம். அதேபோல், இயக்குநர் என்ன கதை கூறினாரோ? அதை அப்படியே தான் எடுத்திருக்கிறார்.

இப்படத்தில் எனக்கு ஜோடி உண்டு. ஆனால், அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லை. பாட்டு பாடி நடனமாடினால் தான் கதாநாயகி என்று அர்த்தம் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனக்கு ஜோடியாக ஈஷா தல்வார் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிவா நடிப்பில் வெளியான தில்லுமுல்லு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சினிமாத்தனமான சண்டைக் காட்சிகள் இருக்காது. சராசரி மனிதனிடம் ஒருவன் பணப்பையை பறித்துக் கொண்டு ஓடினால், அந்த சராசரி மனிதன் என்ன செய்வானோ? அப்படித்தான் சண்டைக் காட்சிகள் இருக்கும்.

செங்கல்பட்டு, செஞ்சி, மதுராந்தகம், வாலாஜா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடித்தினோம். ஒரே அறையில் நடக்கும் திரில்லராக இல்லாமல், பல இடங்களில் நடக்கும் விதமாக இருக்கும். கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு வரை யார் குற்றவாளி என்று யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

நான் சினிமாவிற்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல். என்னுடைய ஆர்.ஜே. பணியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமாவிற்கு வந்தது கடவுளின் ஆசீர்வாதத்தினால்தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில்தான் அறிமுகமானேன். அதற்கு பிறகு என்னுடைய இந்த வளர்ச்சியை ஆசீர்வாதமாக தான் கருதுகிறேன். ஆர்.ஜே.வாக இருக்கும் போது பலரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஆகையால், சினிமாவில் எனக்கு யாரும் போட்டி கிடையாது. மக்களாக கொடுக்காமல், எனக்கு நானே ஸ்டார் பட்டம் போட்டுக் கொள்வது பிடிக்காது.

கடந்த வருடம் ஜனவரி 27ம் தேதி நடிகர் விஜய் கதை கேட்க அழைத்தார். 40 நிமிடங்கள் ஆனது. நன்றாக சிரித்துவிட்டு, உறுதியாகவும், நன்றாகவும் இருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி விடலாமா? என்று கேட்டார். வீட்ல விஷேசங்க படத்திற்கே 5 மாதங்கள் ஆனது. உங்களை இயக்க தயாராவதற்கு குறைந்தது ஒரு வருட காலமாவது வேண்டும் என்றேன். அவரும் சரி என்றார். இதற்கிடையில் அவருக்கு ஏற்ற வகையில் வேறு ஏதேனும் கதை தோன்றினாலும் கூறுவேன். ஆனால், அவருக்கு கூறிய கதை அவருக்கு மட்டும் தான். வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.