பாஜக ரொம்ப டேஞ்சர்… வார்னிங் கொடுத்த பொன்னையன்; ஈபிஎஸ் எடுக்கும் முடிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுகவில்
எடப்பாடி பழனிசாமி
, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிட தயாராகி வருகின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? தொண்டர்கள் யார் பக்கம்? மக்களின் வாக்குகள் யாருக்கு? பாஜக ஆதரவு யாருக்கு? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதில் பாஜகவின் ஆதரவு என்ற விஷயம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இடைத்தேர்தலுக்கு ஆதரவு

ஏனெனில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே பாஜக தலைவர்களை சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டனர். இந்நிலையில் டெல்லி சென்று கட்சியின் மேலிடத்தை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர் இன்று காலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார்.

அரசியல் கணக்கு

அதில் ஒன்றிணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என கட்சி மேலிடம் விரும்புவதாக இருவரிடமும் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அப்படியெனில் ஒன்றுபட்ட அதிமுகவை பாஜகவை விரும்புகிறது எனத் தெரிகிறது. இதன்மூலம் 2024 மக்களவை தேர்தலுக்கு சில அரசியல் கணக்குகளையும் போட்டு வைத்துள்ளது. அணிகள் பிளவுபட்டால் தமிழ்நாட்டில் காலூன்றுவது பாஜகவிற்கு எட்டாக் கனியாக மாறும்.

இரட்டை இலை சின்னம்

இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் தான் இறங்கி வந்திருப்பது கூறியது கவனிக்கத்தக்கது. இரட்டை இலை சின்னத்திற்காக தன்னிடம் ஆதரவு கேட்டால் கட்டாயம் கையெழுத்து போட்டு தருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி முரண்டு பிடித்து வருகிறார். பாஜகவின் சமாதானத்தை அவர் ஏற்பாரா? இல்லை தனியே நின்று பார்த்து கொள்கிறேன் என சவாலை ஏற்பாரா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

பொன்னையன் அதிரடி

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசுகையில், பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம். பாஜக வட நாட்டில் எப்படிப்பட்ட செயல்களை எல்லாம் செய்தது? நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன? இந்த ஆட்சிகளை எல்லாம் பாஜக எப்படி எல்லாம் பிடித்தது? உங்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும்.

கூட்டணி கிடையாது

எனக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக தனியாக தான் நின்றது. அப்படியிருக்கும் தற்போது ஒரே கூட்டணியில் இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேட்பதில் அர்த்தம் இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

காத்திருந்து பாருங்கள்

அதனால் பாஜக கூட எங்கள் பக்கம் இருக்கலாம் அல்லவா? எங்களை விரும்பலாம் அல்லவா? எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா? காத்திருந்து பாருங்கள். கூட்டணியை பொறுத்தவரை அனைவரும் எங்களுடன் இருந்தால் நல்லது தானே என்று கூறினார். முன்னாள் அமைச்சர் பொன்னையனை பொறுத்தவரை சமீப காலமாக சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி.

கட்சியில் ரொம்பவே சீனியர். ஆனால் இவரது பேச்சு எடுபடும் என்பதற்கு யாராலும் உறுதி கூற முடியாது. சரி ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை கவனிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.