தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
புதிய தலைமைச் செயலகமானது வரும் 17ஆம் தேதி, அதாவது அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவின் பிறந்தநாள் அன்று திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. மீதமிருந்த சிறு வேலைகள் ஊழியர்கள் பார்த்து வந்தனர்.
இந்நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தலைமை செயலக வாசல் பகுதிக்கு பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பல பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து போராடி தீயை அணைத்தன. தீ விபத்திற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரமற்ற பணியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவரும் எம்பியுமான பண்டி சஞ்சய் குமார் குற்றம் சாட்டியுள்ளார். தனது பிறந்தநாளுக்கு திறக்க கேசிஆர் எடுத்த அவசர அவசரமான நடவடிக்கைகளே தீ விபத்துக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
newstm.in