தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
அறிவுறுத்தலின் பேரில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக மாநிலங்களவை எம்.பி கிரிராஜன் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெற்கு ரயில்வே மருத்துவமனை
சென்னை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் இடையிலான விகிதம் 1:38442 என மிகவும் உயர்வாக காணப்படுகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை ஷிப்ட் முறையில் பணியாற்ற போதுமானதாக இல்லை. மேலும் இ.சி.ஜி தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர்.
அதிநவீன வசதிகள்
இது மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுகிறது. எனவே ஒருங்கிணைந்த நவீன மருத்துவமனையை கட்டி, புற்றுநோய்க்கு தனியாக ஒரு பிரிவை உருவாக்க வேண்டும். கடந்த 2014ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த தொகுதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பணிகள் முடிவடைவதில் தாமதம்
ஆனால் 10 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை. அரைகுறையாக பணிகள் நடந்து கொண்டிருப்பதால் தற்போது இயங்கி வரும் மருத்துவமனையின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அடிப்படை சிகிச்சை அளிக்கக்கூட போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. பல்வேறு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை அரசு நியமிக்கவில்லை.
மாறும் நோயாளிகளின் திட்டம்
இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில்வே மருத்துவமனையின் பயன்பாடு குறையும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே துறை விளங்குகிறது.
போர்க்கால பணிகள்
இதில் 75 சதவீத ஊழியர்கள் ரயில்வே மருத்துவமனைகளையே நம்பியிருக்கின்றனர். எனவே உடனடியாக நவீன மருத்துவமனையை கட்டி முடிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். இதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக நிதி ஒதுக்க உத்தரவு
அதுமட்டுமின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருப்பது போன்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவைகளை அனைத்து துறைகளிலும் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் பணிகளை முடித்திட அதிக நிதி ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உத்தரவிட்டதாக எம்.பி கிரிராஜன் தெரிவித்தார்.