பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்யும்: அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு| General Assembly to finalize candidate: Supreme Court order in AIADMK case

புதுடில்லி : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்ய பழனிசாமி – பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளடக்கிய அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில், பழனிசாமி – பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.

இதனால், கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ‘ நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கூறியிருந்தார்.

இந்த வழக்கில், தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த பதில் மனுவில் இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11 பொதுக்குழுவை ஏற்கவில்லை என்றும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து, தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் கூறியிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்போம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று நடப்போம் எனக்கூறினார்.

நீதிபதிகள் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை படித்து விட்டோம். குறிப்பிட்ட அரசியல் கட்சி போட்டியிட அனுமதிப்பதா? இல்லையா? அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறினர்.

தொடர்ந்து தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை பதிவேற்ற முடியவில்லை என்றார். அதற்கு நீதிபதிகள், பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என நிர்பந்திக்கிறீர்களா?

பதிவேற்ற முடியாது என்றால், இதற்கு மாற்று என்ன என கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் கூறினர்.

அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தை நிர்பந்திக்கவில்லை. இது தொடர்பாக ஆலோசனை செய்து பிப்., 7 க்குள் பதிலளிப்பதாக கூறினர்.

பிறகு நீதிபதிகள் கூறுகையில், வேட்புமனு தாக்கல் செய்ய பிப்., 7 ம் தேதி இறுதிநாளாக உள்ள போது என்ன முடிவு எடுப்பது என கேள்வி எழுப்பினர்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் போக கூடாது என்றனர். மேலும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, முடக்கப்படவில்லை என பதிலளித்த தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தி போட்டியிடலாம் எனக்கூறியுள்ளது.

latest tamil news

பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளராக கையெழுத்து போட நான் தயாராக உள்ளேன். ஆனால், அதனை ஏற்க பழனிசாமிமறுக்கிறார். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஈகோ கிடையாது எனக்கூறினார்.

இது தொடர்பாக உங்களது கருத்து என்ன என பழனிசாமி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கூறுகையில்,இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக உள்ளது. இருவரும் இணைந்து தீர்வு காணும் போது என்ன பிரச்னை இருக்க போகிறது.

உட்கட்சி பிரச்னையில் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது என எங்களிடம் கூற முடியும். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். நாங்கள் கூறும் பரிந்துரைகளை ஏற்கவில்லை என்றால், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.

கட்சியின் அவைத்தலைவர் இறுதி செய்தால் ஏற்று கொள்வீர்களா? தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் எந்த உத்தரவும் பொருந்தாது. தீர்வு காணாமல் பிரச்னைகள் நீடித்து கொண்டே போக முடியாது. பழனிசாமி – பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும். இதற்காக பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தெரிவிக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.