உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டு, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் இடிந்து விழுந்துள்ளது. ஜோஷிமத் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் விரிசல் விழுந்த தங்களது வீடுகளை காலிசெய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். ஜோஷிமத் நகரில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 60 குடும்பங்கள் பாதுகாப்பற்றச் சூழல் காரணமாக அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஜோஷிமத் நகரமே பூமியில் புதையும் நிலை உருவாகியுள்ளது. பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவு ஏற்பட்டு ஜோஷிமத் நகரம் பூமியில் புதைய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
நெடுஞ்சாலைகள், கட்டங்கள் அமைப்பதற்காக மலைப் பகுதிகள் வெட்டப்படுவது, நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்று இமயமலை தக்காண பீடபூமி நிபுணரும், பெங்களூருவில் உள்ள என்ஐஏஎஸ் மையத்தின் புவியியல் நிபுணருமான சி.பி.ராஜேந்திரன் தெரிவித்தார்.
அதேபோல், நில அதிர்வு மண்டலம் படிப்படியாக நீர் ஊடுருவலை ஏற்படுத்தியதால் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விரைவில் பூகம்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது என வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி இயக்குநர் கலாசந்த் சைன் தெரிவித்தார்.
இந்தநிலையில் இதேபோல் மற்றொரு இமயமலை பகுதியில் நில அதிர்வு காரணமாக குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மசூதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், குடியிருப்பாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
நீதிக்கான போராட்டம் தொடரும்: சிறையில் இருந்து விடுதலையான சித்திக் கப்பான்!
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருவதாகவும், மண் பெயர்ந்ததற்கான காரணத்தை கண்டறிய நிபுணர்கள் கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.