மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, அங்கே தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
மும்பை வடாலா எஸ்.ஐ.டபுள்யூ.எஸ் கல்லூரியில் (S.I.W.S College) தென்னிந்தியப் பண்பாட்டுச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஜனவரியில் பொங்கல் சமயத்தில் கல்லூரியின் அறங்காவலர் ஒருவர் இறந்துவிட்டதால் இந்த வருடத்தின் பொங்கல் விழா கொண்டாடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சயான் கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் ஆர்.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பொங்கல் விழாவைக் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.
எஸ்.ஐ.டபுள்யூ.எஸ் அறக்கட்டளை அறங்காவலர் ஸ்ரீதர், கல்லூரி முதல்வர் டாக்டர் சுனிதா ஸ்ரீவல்கர், துணை முதல்வர் ஸ்ரீமதி நீதா கானோல்கர், இர.பத்மாவதி சீனிவாசன், வைபவ் பஞ்சன் ஐயப்பன், ஜூனியர் கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீமத் ஷீலா கிருஷ்ணன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் நடன நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தென்பொதிகை சிலம்பம் கலைக்கூடம் சார்பாக இந்தச் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கியும், பொன்னாடைகள் போற்றியும் கௌரவித்தனர்.
தமிழ் இசையான நாதஸ்வரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதற்காகப் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் விதவிதமான கோலங்கள் போட்டு அந்த இடத்தையே ரம்மியமாக மாற்றியிருந்தனர்.
இதே போன்று மும்பையின் பாண்டூப் பகுதியிலும் தனியாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாண்டூப்பில் உள்ள பிரைட் உயர்நிலைப்பள்ளியில் நடந்த இவ்விழாவில் தென்னிந்தியப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.தாசன் மற்றும் பிற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.