வேலையில்லா திண்டாட்டம் நிலவும் சூழல்… நூறு நாள் வேலை நிதியை குறைக்க நினைப்பது நியாயமா?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) – 2005 -ன் செயல் திறனை ஆய்வு செய்யவும் அதனை மறுசீரமைக்கவும், மத்திய அரசு, ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் செயலாளர் மற்றும் பிரதமரின் ஆலோசகரான அமர்ஜீத் சின்ஹா தலைமையில் குழுவொன்றை அமைத்தது.

இதைத் தொடர்ந்து வந்த ஊடகக் செய்திகளிலிருந்து, திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திப் பொதுச் சொத்துகளை உருவாக்கியுள்ள கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதியைக் குறைக்கவும் பீகார் போன்ற ஏழ்மையான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும் வகை செய்யும்படி சட்டத்தைத் திருத்த, இக்குழு பரிந்துரைக்கலாம் எனத் தெரிகிறது. ‘ஏழை மாநிலங்களுக்கு அதிக நிதி கொடுப்பது நியாயம்தானே?’ என்ற கேள்வி நமக்கு எழலாம். அதற்கு விடை காண சட்டத்தின் முதன்மை நோக்கத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.

சட்டத்தின் நோக்கம்

சமூகச் செயற்பாட்டாளர் அருணா ராய் அவர்கள் அங்கம் வகிக்கும் ராஜஸ்தானில் இயங்கும் மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் – MKSS (தொழிலாளர்கள் விவசாயிகளை வலுப்படுத்தும் கூட்டமைப்பு) என்ற இயக்கத்தின் மூலம் தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து, ‘எங்கள் கைகளுக்கு வேலை கொடுங்கள்’, ‘எங்கள் வேலைக்கு முழு கூலி கொடுங்கள்’, ‘முழுமையடைந்த வேலை, முழுமையான கூலி!’ போன்ற புகழ்பெற்ற முழக்கங்களுடன் போராடிக் கிடைத்த இச்சட்டத்தின் முதல் பக்கத்தில், ‘கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றுதான் உள்ளதே தவிர ‘வறுமையை ஒழிப்பது’ இச்சட்டத்தின் முதன்மை நோக்கமல்ல.

அதாவது, ஏழை மாநிலமாக இருந்தாலும் சரி, பணக்கார மாநிலமாக இருந்தாலும் சரி, இந்திய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதே இச்சட்டத்தின் முதன்மை நோக்கம். மேலும், எல்லா மாநிலங்களிலும் பெருந்தொற்றுக் காலங்களில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக நூறுநாள் திட்டம் விளங்கியது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

விவசாயத்தை அழிக்குமா இத்திட்டம்?

இத்திட்டத்தால் விவசாயம் அழிந்து விட்டது, மக்கள் அனைவரும் சோம்பேறிகள் ஆகிவிட்டனர் என்ற கருத்து தமிழ்நாட்டில் பரவலாக உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார், ‘வாழும் கிராமங்கள்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில், “விவசாயம் நடக்காத நூறு நாட்களில் வேலை செய்யுமாறு திட்டத்தை நாம் மாற்ற வேண்டும். அதற்கு எந்த நூறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று கிராமசபை தான் முடிவு செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் அல்ல” என்று கூறியிருப்பார். உண்மையில் சட்டமும் அதைத் தான் கூறுகிறது.

நூறு நாள் வேலை

MGNREGA -2005 சட்டத்தின் பிரிவுகள் 16 மற்றும் 17 இன் படி ‘எந்த நூறு நாட்கள் வேலை செய்ய வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும், அதற்கான பட்ஜெட் எவ்வளவு?’ ஆகியவற்றை முடிவு செய்வது, நடந்து கொண்டிருக்கும் வேலையைக் கண்காணிப்பது, ஆய்வு செய்வது, முடிக்கப்பட்ட வேலைகளைச் சமூகத் தணிக்கை செய்வது என அனைத்து அதிகாரங்களும் எளிய மக்கள் பங்குபெறும் கிராம சபைக்கே உள்ளன. எனவே, இச்சட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்பதுதான் பிரச்னையே தவிர, சட்டமோ, திட்டமோ பிரச்னையல்ல.

இச்சட்டம் மட்டுமல்லாமல், எளிய மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ள சட்டங்களான வன உரிமைச் சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம் போன்ற சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேலை பெறும் உரிமை

இச்சட்டம் ஊரக பகுதிகளிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு நிதியாண்டும் குறைந்த பட்சம் நூறு நாட்கள் வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இதை வேறு விதமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வருடத்திற்கு நூறு நாட்கள் வேலை பெறும் உரிமையை இச்சட்டம் ஊரகப்பகுதி குடும்பங்களுக்கு வழங்குகிறது.

உலகத்திலேயே நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில், முன்வரும் குடும்பங்களுக்கெல்லாம் ‘ஊதிய வேலை’யை உரிமையாக உறுதி செய்துள்ள ஒரே நாடு இந்தியாதான். இச்சட்டம், விவசாயத் தொழிலாளர்கள் மீது தனியார் முதலாளிகள் செலுத்தும் ஆதிக்கத்தை தகர்த்துள்ளது. அந்தத் தொழிலாளர்களின் பேரம் பேசும் அதிகாரத்தை அதிகரித்துள்ளது. அனைவருக்கும் சமமான கூலி என்பதை உறுதி செய்துள்ளது. ‘வேலை பெறும் உரிமை’ என்பதோடு ‘சமூகப் பாதுகாப்பைப் பெறும் உரிமை’ என்பதையும் இச்சட்டம் உறுதி செய்கிறது.

நூறு நாள் வேலை

முன்னோடி மாநிலங்கள்

குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948-ஐ இச்சட்டம் மீறுவதாக முன்பு வந்த குற்றச்சாட்டுகள் மறைந்து, அச்சட்டத்தை மீறாமல், தற்போது இச்சட்டம் வெற்றிகரமாக பல மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முக்கியமாக வட இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் தென்னிந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களில், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மாநில அரசின் ஒத்துழைப்பு மூலம், இச்சட்டத்தின் முதன்மை நோக்கமான நூறு நாள்களுக்கு வேலையை உறுதிசெய்தல் என்பதைத் தாண்டி மற்ற நோக்கங்களான இயற்கை வளங்கள் பராமரிப்பு, வறுமை ஒழிப்பு, பொதுச் சொத்துகளை உருவாக்குதல் போன்றவையும் நிறைவேற்றியுள்ளன. நாம் கூற வருவது, இந்த வாய்ப்புகள், அனைத்து மாநிலங்களுக்குமே உள்ளன என்பதுதான்.

கேரளாவில் இச்சட்டம் மூலம் மக்கள் உருவாக்கியுள்ள பொதுச் சொத்துக்கள் அனைத்தும் அவர்களின் சமூகவுடைமையாகியுள்ளதால், “அனைத்து உற்பத்தி வழிமுறைகளின் மீதும் சமூகம் உரிமை எடுத்துக் கொள்ளும் போது (social ownership of all means of productions) அது அரசு, சந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தும்” என்ற மார்க்சின் வாதத்தை உண்மையாக்கும் விதமாக இருக்கிறது மத்திய அரசின் செயல்கள்.

பல பெரு முதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு இதுபோன்ற மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியைக் குறைக்க நினைப்பது கண்டனத்திற்குரியது. ‘ஒரு கோடி வேலைவாய்ப்பை’ உருவாக்குவோம் என்று 2013 -ல் முழங்கிய நம் பிரதமர், வேலையில்லா திண்டாட்டம் நிலவும் சூழலில், நாடு முழுவதும் சுமார் 5 கோடி குடும்பங்களுக்கு ‘ஊதிய வேலைவாய்ப்பை’ உறுதி செய்திருக்கும் இச்சட்டத்தை மாற்றியமைக்க நினைப்பது எந்த வகையிலும் அறமற்ற செயலாகும்.

பிற சிறப்பம்சங்கள்…

இத்திட்டத்தின்படி ஊதியமானது, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தொழிலாளர்களின் கைகளில் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2014 முதல் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் முறை, இணையதளத்தின் மூலம் வெளிப்படைத் தன்மை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு பல மாநிலங்களில் திட்டம் முறையாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. 2016 வரையிலும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 5 கோடி குடும்பங்களும், 15 கோடி ஊழியர்களும் வேலை பெற்றுள்ளனர். இச்சட்டம் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கினாலும் 50%க்கும் மேலான பெண்கள் வேலை பெற்று வருகின்றனர். அதுவும் தமிழ்நாட்டில் 80% க்கும் மேல் பெண்கள் தான் வேலை செய்கிறார்கள்.

நூறு நாள் வேலை

தமிழ்நாட்டில், பெண்கள் 86% நாள்களும், பட்டியல் பழங்குடி மக்கள் 30% நாள்களும் வேலை செய்துள்ளனர் என்பது இத்திட்டத்தின் மூலம் விளிம்புநிலை மக்கள் அதிகளவு பயனடைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்திய அளவில் பெருந்தொற்று காலத்தில் சுமார் 389 கோடி மனித சக்தி நாள்களுக்கு வேலை நடந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீர் மேலாண்மை, அடிப்படை உட்கட்டமைப்பு, சாலைகள் மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு போன்ற பல செயல்பாடுகள் இந்திய அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், 1,06,000 மற்றும் 1,11,000 கோடியாக இருந்த செலவுக் கணக்கு, இந்த ஆண்டு 73,000 கோடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடும் நூறு நாள் வேலையும்…

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 8000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் வேலை நடந்துள்ளது. இந்திய அளவில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இங்கோ சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 51 நாள்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. பெரம்பலூர், கடலூர், அரியலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 30 நாட்களுக்கும் குறைவாகவே வேலை வழங்கப்படுகிறது. கூலியும் சராசரியாக ₹212 தான் வழங்கப்படுகிறது. சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திரங்கள் இப்போது பரவலாகிவிட்டன. சமூகத் தணிக்கை முடிவுகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பணிகளின் தொகுப்பு (shelf of projects),  லேபர் பட்ஜெட் போன்றவை மக்கள் பங்கேற்புடன் நடப்பதில்லை. அரசு அலுவலர்கள் மட்டத்திலேயே இவை முடிவெடுக்கப்படுகின்றன. முக்கியமாக கிராம சபையின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது.

நூறு நாள் வேலை

இது போன்ற பல குறைகள் இருந்தாலும் கிராம ஊராட்சியின் முக்கிய நிதி ஆதாரமாகவும், கிராமப்புற எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பாகவும் விளங்கும் இச்சட்டத்தை பாதுகாப்பது நம் கடமை.

எனவே, சின்ஹா தலைமையிலான குழு, ஒருவேளை தமிழ்நாடு தென்னிந்திய மாநிலங்களின் MGNREGS பணிகளை/ நிதியைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைத்தால், அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது.மேலும்,  தமிழ்நாடு அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இறுதியாக, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மக்களுக்கும், ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இச்சட்டம் பற்றிய முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் திட்டத்தை செயல்படுத்த முறையான கட்டமைப்பை மாநில அரசுகள் உறுதி செய்வதும் தொடர்ச்சியாக நடக்க வேண்டும். அதை விடுத்து, மக்களின் உரிமை சார்ந்த சட்டத்தினை, அதுவும் மக்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ள சட்டத்திற்கான நிதியைக் குறைக்க முனைவது என்பது ஜனநாயக விரோதமாகும். “உரிமைகள் பற்றி மக்கள் விழிப்புணர்வு கொள்வது என்பது வளர்ச்சிவாதத்தின் மேலிருந்து கீழ் அணுகும் தன்மையை மாற்றும்” என்ற புரிதலின் அடிப்படியில், கிராமசபைக்கு அதிகாரம் வழங்கி வளர்ச்சியை கீழிருந்து மேலாக அணுகும் இச்சட்டத்தை நாம் பாதுகாப்பதோடு இந்தியா முழுமைக்கும் உறுதி செய்ய வேண்டும் என்பதே நம் முன்னே உள்ள வரலாற்றுக்  கடமை!

நகர்ப்புறங்களுக்கும் வேண்டும் நூறுநாள் வேலை!

தற்போது ஊரகப்பகுதிகளுக்கு மட்டுமே உள்ள இச்சட்டம், நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது பல சமூக இயக்கங்களின் கோரிக்கையாகும். எப்படி ஊரகப்பகுதிகளுக்கு இச்சட்டத்தின்படி, அளவிட முடியாத வேலைகளாக (non-tangible works) அரசு கருதும் விவசாயம் மற்றும் பிற வேலைகள் தவிர்த்து, 266 வேலைகளை செயல்படுத்த முடியும் என்று பட்டியலிடப்பட்டுள்ளதோ, அதுபோல நகரங்களுக்கும் வேலைகளைப் பட்டியலிட்டு அவற்றை நகரக் குடும்பங்களுக்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உறுதி செய்யும் சட்டத் திருத்தத்தினை அரசு மேற்கொள்ள முடியும்.  தேவை அக்கறையும் அரசியல் உறுதியும்தான்.

மத்திய அரசு

மத்திய அரசின் அதிகாரம்

சமீபத்தில் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, கேரளாவிற்கு ஒதுக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளையும் மேற்கு வங்காளத்திற்கு இத்திட்டத்தின் மூலம் வர வேண்டிய சுமார் 7500 கோடி ரூபாயை முடக்கியும் மத்திய அரசு செயல்பட்டது. இது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், சட்ட விதிமுறைகளின் இத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால், மத்திய அரசானது மாநிலங்களுக்கான நிதியினை நிறுத்தி, முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

கட்டுரையாளர்:

– இரா.வினோத்குமார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.