நகைச்சுவை நடிகராக பிரபலமாக வலம் வந்த ஆர்.ஜெ.பாலாஜி LKG என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். மேலும் அப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆர்.ஜெ.பாலாஜி எழுதினார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவருக்கு ஹீரோவாக நடிக்கும் நம்பிக்கையை கொடுத்தது.
அதைத்தொடர்ந்து முக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என ஹீரோவாக ஹாட்ரிக் வெற்றியை குவித்தார் ஆர்.ஜெ.பாலாஜி. இதில் மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் படங்களை தானே இயக்கினார். இந்நிலையில் இதுவரை காமெடி கலந்த படங்களிலேயே நடித்து வந்த ஆர்.ஜெ.பாலாஜி முதல்முறையாக ரன் பேபி ரன் படத்தின் மூலம் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Thalapathy 67: தளபதி 67 படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதுதான்..வெளிப்படையாக பேசிய நடிகர்..!
இப்படத்தில் ஆர்.ஜெ பாலாஜியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஜியான் கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது இப்படம் திரையில் வெளியாகியுள்ள நிலையில் படத்தை பற்றிய விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
படத்தின் கதை என்னவென்றால், குடும்பத்துடன் சந்தோஷமாக ஆர்.ஜெ.பாலாஜி வாழ்ந்து வருகின்றார். அப்போது ஒரு நாள் அவரின் காரில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏறுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏதோ பிரச்சனையில் இருக்க ஆர்.ஜெ.பாலாஜி ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக்கொண்டதற்காக அவரை தன் வீட்டில் தங்கவைக்கின்றார். அடுத்த நாள் பார்க்கும்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இறந்து கிடக்கின்றார். அதன் பிறகு நடப்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கின்றார் இயக்குனர்.
படத்தின் மிகப்பெரிய பலமே முதல் பாதியில் வரும் விறுவிறுப்பான காட்சிகள் தான். பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கின்றது. மேலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தேகமாக இருந்தது சீரியஸான படங்கள் ஆர்.ஜெ.பாலாஜிக்கு செட் ஆகுமா என்பது தான். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு ஆர்.ஜெ.பாலாஜி சீரியஸான கதாபாத்திரத்திலும் கனகச்சிதமாக நடித்துள்ளார். அவரை போலவே படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அதற்கு பக்கபலமாக இசை, படத்தொகுப்பு அனைத்தும் அமைந்துள்ளது.
என்ன இருந்தாலும் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் சில தொய்வுகள் இருக்கின்றது. அதனை மட்டும் சரி செய்திருந்தால் படம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். இருப்பினும் ஆர்.ஜெ.பாலாஜிக்கு ரன் பேபி ரன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.