கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்தநிலையில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%),
காங்கிரஸ்
80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன.
ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது.
இதன் பின்னணியில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி எம்.எல்.ஏக்கள் விலை போன சம்பவமும், இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிகழ்வும் அரங்கேறின. அதன்பிறகு எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என இரண்டு பாஜக முதல்வர்கள் பதவி வகித்தனர். இந்த சூழலில் தான் 2023 சட்டப்பேரவை வரவுள்ளது. கடந்த தேர்தலை போல இல்லாமல் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் குறைந்தது 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இம்முறை கூட்டணி கணக்குகள் மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன் பாஜக கைகோர்க்குமா எனக் கேள்வி எழுந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என அக்கட்சி தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனவே பாஜக தனித்து களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. 200 யுனிட் வரை இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஹிட்லருக்கு நடந்தது தான் பிரதமர் மோடிக்கும் நடக்கும் என தெரிவித்தார். அதேபோல் ‘‘பாஜக என்னை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் ஆக்கினாலும் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் செல்லமாட்டேன். என் சடலம் கூட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் செல்லாது.
நான் இந்து விரோதி என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவின் சி.டி.ரவி என்னை சித்தரமுல்லா கான் என்று அழைக்கிறார். ஆனால் காந்திஜி ஒரு உண்மையான இந்து. காந்திஜியைக் கொன்ற கோட்சேவை வணங்கும் இந்துக்கள் தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள். நாங்கள் ஆட்சியில் இருந்த போது அனைவருக்குமான உணவுபாதுகாப்பை உறுதிபடுத்தினோம். ஆனால் பாஜக அதை செய்ய தவறிவிட்டது’’ என கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்க கருத்து கணிப்பு; உலக தலைவர் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்.!
இந்தநிலையில் நடைபெற உள்ள தேர்தல் தான், நான் சந்திக்கும் கடைசி தேர்தல் என சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தான் ஓய்வு பெற்றாலும், கட்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். மூத்த அரசியல் தலைவர் சித்தராமையாவின் அறிவிப்பால் காங்கிரஸ் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.