உத்தரப்பிரதேச மாநிலம், மோகன்லால்கஞ்சில் நேற்று 24 வயது இளைஞர் ஒருவரின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், சஉடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தது. அதைத் தொடர்ந்து விசாரணையையும் மேற்கொண்டது. அதில் தற்கொலை செய்துகொண்டவர் பர்வார் பஸ்சிம் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு கடந்த வாரம்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது என்றும், பிப்ரவரி 20-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் அவர் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், திலீப்பின் சட்டை பாக்கெட்டிலிருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், “நான் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தேன். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக, எனக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துவிட்டது. அதனால், என்னுடைய காதலி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால், என்னால் அப்படி செய்ய முடியவில்லை. இந்த நிலையில்தான், `நீ என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், நீ என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டாய் என காவல்துறையில் பொய்யாகப் புகார் செய்வேன்’ என்று மிரட்டினார். எனக்கு வேறு வழிதெரியவில்லை, அதனால்தான் இந்த முடிவை எடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய உள்ளூர் காவல்துறையினர், “காதலியின் மிரட்டலுக்கு பயந்தே திலீப் குமார், மோகன்லால்கஞ்ச் பகுதியிலுள்ள உத்ரகான் கிராமத்தின் கால்வாய் அருகே மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இருப்பினும், இறந்தவரின் குடும்பத்தினர் இதுவரை புகார் அளிக்கவில்லை. பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன்பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.