எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாருக்கு படிக விழா.. புகழ்மாலை சூட்டிய தமிழ் எழுத்தாளர்கள்!

பிரபல எழுத்தாளரான லஷ்மி சரவணகுமார் எழுத்துலக வாழ்வில் 15 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி நடைபெற்ற படிக விழாவில், பலரும் அவரைப் பாராட்டிப் பேசினர்.
image
பிரபல எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார், தன் எழுத்துலக வாழ்வில் 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் இன்று படிக விழா கொண்டாடப்பட்டது.
image
இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, எழுத்தாளர் லஷ்மியின் படைப்பு குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
image
எழுத்தாளர்கள் ஜெயமோகன், காளிதாசன், சுனில் கிருஷ்ணன், ஷாலினி, கவிஞர்கள் வேல் கண்ணன், மசூக் ரகுமான், உதவி இயக்குநர் ஸ்ரீராம், பத்திரிகையாளர் ஸ்டாலின், பதிப்பாளர் ஜீவ கரிகாலன், வாசகர்கள் யோகேஸ்வரன் ராமநாதன், சரவணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
image
image
பரத நாட்டியக் கலைஞர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ், எழுத்தாளர் பழ.செல்வகுமார் ஆகியோர் இப்படிக விழாவிற்கு வரவேற்புரை வழங்கினர்.
image
பின்னர் மேடையேறிய மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் ‘கொமோரா’ நாவல் குறித்தும்..
image
கவிஞர் மசூக் ரகுமான் ’ரூஹ்’ நாவல் குறித்தும்,
image
எழுத்தாளர் செல்வேந்திரன் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாவல் குறித்தும் பேசினர்.
image
image
லஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணன், ஷாலினி ப்ரியதர்ஷினி, ராம் சந்தோஷ் ஆகியோர் தங்கள் பார்வையை வெளிப்படுத்தினர்.
image
இதில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் ஜெயமோகன், ”எழுத்தாளர்கள் கொண்டாடப்படவேண்டும். பல எழுத்தாளர்களுக்கு வெள்ளி விழா, பொன்விழா, பவளவிழா போன்றவை கொண்டாடப்படவில்லை. நான் என் இளவயது முதலே பெரும் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதை, வழக்கமாக வைத்திருக்கிறேன்.
image
 அகரமுதல்வன், லஷ்மிக்கு விழா எடுத்ததுபோல, என் இளவயதில் பிரபஞ்சனுக்கு விழா எடுத்திருக்கிறேன். எழுத்துலகில் 15 ஆண்டுகள் இயங்கிவரும் இளம் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாருக்கு படிக விழா நடப்பது என்னை மகிழ்ச்சியடைய வைக்கிறது; நிறைவை அளிக்கிறது” என்றார்.
குறிப்பாக இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாது, ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளரின் படைப்புகளை எப்படி பார்க்கிறார், என்னென்ன விமர்சனங்களை முன்வைக்கிறார், எப்படி ரசிக்கிறார் என தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த படிக விழா இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
யார் இந்த லஷ்மி சரவணக்குமார்!
லஷ்மி சரவணக்குமார் (Lakshmi Saravanakumar) மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என பன்முக படைப்புகளை வழங்கி வருகிறார். லக்ஷ்மி சரவணக்குமார் தன் 17-வது வயதிலேயே தீக்கதிர், செம்மலர் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.2007 நவம்பர் மாதத்தில் `புதிய காற்று’ இதழில் `எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயதான பொழுது’ என்ற முதல் சிறுகதை வெளியானது. இவரது முதல் சிறுகதைத் தொகுதி நீலநதி. தொடர்ந்து 6 சிறுகதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன.
லக்ஷ்மி சரவணக்குமாரின் உப்புநாய்கள் அவருடைய முதல் நாவல். தொடர்ந்து தென்தமிழகத்தின் வேட்டைப்பின்னணி கொண்ட கானகன், கம்போடிய உள்நாட்டுக்கலவரப் பின்னணி கொண்ட கொமோரா, பாலியல் தொழிலாளர்ப்பெண் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் ‘நீலப்படம்’ இஸ்லாமிய அழகியல் சாயல்கொண்ட ‘ரூஹ்’ போன்ற நாவல்களை எழுதினார். மதுரையின் பெருநகர் குற்றப்பின்னணியை சித்தரிக்கும் இரண்டாவது ஆட்டம் ஜூனியர் விகடனில் தொடராக வந்த நாவல்.
திரைத்துறையில் உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார். விளிம்புநிலை மனிதர்கள் சார்ந்த, பாலியல் சார்ந்த அதன் பின்னணியிலிருக்கும் குரூரங்களையும், வன்முறைகளையும் எழுதியிருக்கிறார்.
எழுத்தாளர் கோணங்கியின் மூலம் படைப்பு உலகத்திற்கு வந்தவர். ‘மயான காண்டம்’ எனும் குறும்படம் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான சரவணகுமார், ‘கானகன்’ என்ற நாவலுக்கு 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருதினை வென்றவராக அறியப்படுகிறார். இவர் எழுதிய உப்பு நாய்கள் என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார். வார இதழில் துணையாசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதி வருபவர். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான பதிவுகளையே தன் நாவலில் எழுதியிருக்கும் இவர், சமூகத்தில் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்வோரின் கசப்பான பக்கங்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
நாவல்கள்:
உப்புநாய்கள்
கானகன்
நீலப்படம்
கொமோரா
ரூஹ்
வாக்குமூலம்
ஐரிஸ்
ரெண்டாம் ஆட்டம்
சிறுகதை தொகுப்புகள்:
நீல நதி
யாக்கை
முதல் கதை
போர்க்குதிரை
வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை
மச்சம்
கவிதைத் தொகுப்பு
மோக்லியை தொலைத்த சிறுத்தை (2014)
கட்டுரை
தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு
Huntsman (by Aswini Kumar – Zero Degree Publishing)Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.