"காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பேனா நினைவுச்சின்னத்தை விமர்சிக்கிறார்கள்!" – கே.எஸ்.அழகிரி தாக்கு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையைப் போற்றும்விதமாக, அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தைப் பிரமாண்ட சிலையாகச் சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க, தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையைவிடப் பெரியதாக 134 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

மெரினா கடலில் பேனா சிலை

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “13 வயதில் அரசியல் பிரவேசம் செய்து, 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், எழுத்தாற்றல் மூலம் ஆற்றிய மகத்தான தொண்டை போற்றுகிற வகையில், பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படவிருக்கிறது. இதை உள்நோக்கத்தோடு எதிர்த்து கருத்துகள் கூறப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கடந்த ஒரு மாத காலமாக நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரைப் பகுதியில் அதிகாலையில் ஆய்வுசெய்து அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது. வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் குமரி முனையில் திருவுருவச் சிலை அமைத்த கலைஞருக்கு, பேனா நினைவுச்சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக்கூடியதல்ல.

கருணாநிதி

இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ஏறத்தாழ 10 மைல் தொலைவுக்கு கடலில்தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள ஏன் மறுக்கிறார்கள்… அதேபோல, உலக நாடுகளில் பார்த்தால் நூற்றுக்கணக்கான அருங்காட்சியகங்களும் சுரங்கப்பாதைகளும் பல கிலோமீட்டர் ஆழத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு, மக்களின் பேராதரவு பெற்றுவருவதைச் சகித்துக்கொள்ள முடியாத, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச்சின்னத்தை விமர்சித்துவருகிறார்கள்.

இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியும். மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தைத்தான் எதிர்பார்க்க முடியும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அணுகுமுறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயலாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.