இந்து கடவுள் கிருஷ்ணர் போல, முதல்வர் ஸ்டாலின் எங்களின் வெற்றிக்கு வழி வகுக்கிறார் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமையில், இன்று கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா, துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ராகுல்காந்தி நடைப்பயண வெற்றியை குறிக்கும் வகையில் “கையோடு கைகோர்ப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், “இந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாபெரும் வெற்றியை பெறுவார்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார்.
அதே சமயத்தில் உலக நாடுகளில் உள்ள குழப்பத்தை விட, எதிர்க்கட்சி தரப்பில் இப்போதுவரை பெரிய குழப்பம் நிலவுகிறது. இதற்க்கு காரணம் தமிழக பாஜக தான். மகாராஷ்டரா, கோவாவில் பிரதான கட்சியை இரண்டாக உடைத்து ஆட்சியை மாற்றியது போல, தற்போது தமிழகத்திலும் அதிமுகவை உருக்குலைத்து ஒன்றுமே இல்லாமல் போகின்ற அளவிற்கு வீழ்த்தியிருக்கின்றார்கள்” என்று கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.