கடந்த மாத இறுதியில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் வெளியிட்ட அரசாணையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி கோவை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஜி.எஸ்.சமீரன் கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டவர்.
ஜி.எஸ்.சமீரன் இடமாற்றம்
கோவையில் நோய்த்தொற்று பெரிதும் குறைய தீவிரமாக களப் பணியாற்றினார். பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் பெற்றிருந்தார். இதனால் இவரது இடமாற்றம் சற்று வருத்தத்திற்கு உரியதாக கோவை மக்கள் பார்க்கின்றனர். இதன் பின்னால் சில அரசியல் கணக்குகளும் இருப்பதால் அதிகாரிகள் இடமாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது. ஆட்சியாளர்கள் சூழலுக்கு ஏற்ப ட்ரான்ஸ்பர் உத்தரவுகளை தெறிக்க விட்டுக் கொண்டே இருப்பர்.
புதிய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி
இந்நிலையில் கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கிராந்தி குமார் பாடி இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளில் கையெழுத்திட்டார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் 183வது ஆட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே பணியிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோப்புகளை ஒப்படைத்தார்.
முறைப்படி பொறுப்பேற்பு
புதிய மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, நான் 2015ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ் பேட்ச் அதிகாரி. திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தேன்.
மக்கள் நலனே முதன்மையானது
இன்று கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொள்கிறேன். அரசின் திட்டங்கள் மற்றும் பயன்கள் மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மக்களின் குறைகளை தீர்க்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். அனைத்து திட்டங்களையும் சரியான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
ஸ்டாலின் அறிவுரை
அனைத்து துறைகளில் உள்ள திட்டங்களையும் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
முதல் நாளே அரசு நிர்வாகம், நலத்திட்டப் பணிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றெல்லாம் பேசியது அதிகாரிகளை சற்று சிந்திக்க வைத்துள்ளது. இவரும் கறாரான அதிகாரியா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. போகப் போக தெரிந்துவிடும் என்று கூறிக் கொண்டே சென்றனர். தமிழ்நாட்டில் அடுத்து பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருப்பது 2024 மக்களவை தேர்தல்.
ட்ரான்ஸ்பர் உத்தரவு
அதற்குள் அதிகாரிகளை சரியான இடத்தில் அமர வைக்க வேண்டும். நீண்ட நாட்கள் பணியில் இருந்தால் தேர்தல் ஆணையம் ட்ரான்ஸ்பர் கொடுத்து விடும். அதனால் முன்கூட்டியே தமிழ்நாடு அரசு தெளிவான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.