சென்னை: பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயாபர் கழிவுகளை தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் தங்களது வீட்டுகுப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம்பிரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி வருகின்றனர். இதைப் போலவே தற்போது சானிட்டரி நாப்கின், டயாபர் கழிவுகளையும் தனியாக பிரித்து, தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
விஞ்ஞான முறைப்படி எரியூட்டல்: இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளை கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களில் விஞ்ஞான முறைப்படி எரியூட்டமாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கழிவுகளை கையாள்வது குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டபரப்புரையாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே, சானிட்டரி நாப்கின், டயாபர்கழிவுகளை உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வீட்டிலும், அக்கழிவுகளை தனியாக பிரித்து, மக்கும்உறையில் போட்டு தூய்மைப்பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஏற்கெனவே, இதுவரை மண்டல வாரியாக பரிசோதனை அடிப்படையில் 18,140 கிலோ சானிட்டரி நாப்கின், டயாபர் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் மணலியில் உள்ள எரியூட்டு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விஞ்ஞான முறைப்படி எரியூட்டப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.