“என் ஹஸ்பண்ட் ரொம்ப ஹேண்ட்சமா இருப்பார். ஆனா உடல் பருமனாகவும் இருப்பார். இதனால, தாம்பத்திய உறவு வெச்சுக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் என்மேல ரொம்ப பிரியமா இருக்கார். நீங்க பருமனா இருக்கிறதால உறவு வெச்சுக்கிறப்போ கஷ்டமா இருக்குன்னு வெளிப்படையா சொன்னா மனசுக் கஷ்டப்படுவாரோன்னு சங்கடமா இருக்கு. என்ன செய்யுறது டாக்டர்?” – இது ஒரு வாசகியின் கேள்வி. [email protected] மெயில் மூலமாக தன்னுடைய கேள்வியை நமக்கு அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கு, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி பதிலளிக்கிறார்.
“உடல் பருமனான கணவருடன் உறவுகொள்ளும்போது, நிச்சயம் அது உங்களுக்கு உடலளவில் கடினமானதாகத்தான் இருக்கும். தவிர, ஒருவருடைய உடல் எடை அதிகமாக இருந்தாலும் கணவன், மனைவி இருவராலுமே தாம்பத்திய உறவை முழுமையாக அனுபவிக்க முடியாது. ‘நீங்கள் கொஞ்சம் இளைத்தால், நம்முடைய தாம்பத்திய உறவு இன்னும் சுகமாக இருக்கும்’ என்பதை அன்பாக, பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.
உடனடியாக ஒரு மருத்துவரை சந்தித்து, உங்கள் கணவருடைய உடல் பருமனுக்கு என்ன காரணம் என்பதையறிந்து, அதற்கான சிகிச்சைகளை எடுக்கச் சொல்லுங்கள். டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் கணவர் உடல் எடையைக் குறைப்பதற்கு நீங்களும் உதவி செய்யுங்கள். சமையலில் மாவுச்சத்தைக் குறைத்து, புரத உணவுகளை அதிகப்படுத்துங்கள். கூடவே, நிறைய காய்கறிகளையும் சேருங்கள்.
தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை, நீங்கள் கீழ்ப்பக்கமும் அவர் மேல் பக்கமும் இருக்கிற பொசிஷனை தவிருங்கள். இந்த பொசிஷன் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். அதனால், நீங்கள் மேல் பக்கமாக இருப்பது; பக்கவாட்டு பொசிஷன் போன்றவற்றைப் பின்பற்றுங்கள். உடல் பருமனைக் குறைப்பது தாம்பத்திய உறவுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் நல்லது” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.