தாம்பரம்: பள்ளிப் பேருந்து ஓட்டைக்குள் விழுந்து மாணவி ஸ்ருதி உயிரிந்த வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி நேற்று தாம்பரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி, கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பள்ளி பேருந்து இருக்கையின் கீழ்ப்பகுதியில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து, அதே பேருந்தின் சக்கரம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், வாகன உரிமையாளர் யோகேஷ், ஓட்டுநர் சீமான் உள்ளிட்ட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
10 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட 35 சாட்சியங்களில் பலர் பிறழ்சாட்சியாக மாறினர். இதனால், குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகக் கூறி கடந்த மாதம் 25-ம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் நீதிபதி காயத்திரி விடுதலை செய்தார்.
எனவே, இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நேற்று தாம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மாதர் சங்கத்தின் தாம்பரம் பகுதி தலைவர் ஏ.பிரேமா தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பகுதிச் செயலாளர் ஆர்.விஜயா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.பாரதி ஆகியோர் பேசினர்.