புதுச்சேரி: புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்திரா காந்தி சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர்ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.
இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சீனியர் துணை தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ், பொதுச்செயலாளர் இளையராஜா மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து பலர் கலந்து கொண்டனர். மக்களுக்கு பயனற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசை கண்டித்தும், புதுச்சேரி மின்துறை பிரிபெய்டு மீட்டர் திட்டத்தை கண்டித்தும், பிரதமர் மோடி, அதானி சேர்ந்து எல்ஐசி, எஸ்பிஐ வங்கியில் ரூ.1.13 லட்சம் கோடி மக்கள் முதலீட்டை கொள்ளை அடித்து இமாலய ஊழல் புரிந்துள்ளதாகவும் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அதானி குழுமம் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் அதானி குழுமமானது எல்ஐசியில் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் ரூ.28 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. அவர்கள் தங்களுடைய பங்குகள் குறைந்த விலையில் விற்றாலும் கூட, அதனை அதிகமாக காட்டி வங்கிகளை ஏமாற்றி பணத்தை வாங்கி இருக்கிறார்கள்.பணத்தை பெறுவதற்காக பங்குகளின் விலையை அதிகமாக ஏற்றி, மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்கி, பங்கு சந்தையில் நிறைய பங்குகளை விற்பதுதான் அவர்களுடைய வேலையாக இருந்துள்ளது. படிப்படியாக மொரிஷியஸ், அபுதாபி, துபாய், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி பல போலி நிறுவனங்களை ஆரம்பித்து, இந்தியாவில் இருந்து நிறைய பணத்தை எடுத்து சென்றுள்ளார். இது மிகப்பெரிய இமாலய ஊழல். கடந்த 8 நாட்களில் அதானி குழுமமானது ரூ.8 லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளது. உலகின் 3-வது பணக்காரராக இருந்த அவர், தற்போது 15-வது இடத்துக்கு சென்றுள்ளார்.
மோடியின் ஆதரவால்தான் அவர் மிகப்பெரிய பணக்காரர் ஆனார். இதில் மோடியின் பங்கு அதிகமாக உள்ளது. இதுசம்மந்தமாக விசாரணை வைத்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்தில் இப்பிரச்னையை ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேவும் எழுப்பினார்கள். ஆனால், இதற்கு மோடி அரசு பதில் சொல்லவில்லை. இதை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும். நாம் எப்படி தொலைபேசி, செல்போனுக்கு பணத்தை செலுத்திவிட்டு பேசுகிறோமோ, அதேபோல் புதுச்சேரியில் மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்கிறார்கள்.
ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள், தினக்கூலி ஊழியர்கள், தாய்மார்கள் எப்படி முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டு மின்சாரத்தை பெற முடியும். இதுபோன்ற திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது.
இந்த திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்தார்கள். அடுத்ததாக ரூ.250 கோடி வாங்கி பிரீபெய்டு மின் மீட்டரை இவர்கள் பொறுத்திவிட்டு, மின்துறையை தனியாரிடம் தாரை வார்க்க இந்த வேலை நடக்கிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுசம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்கள் பணம் செலுத்திவிட்டுதான் மின்சாரம் பெற வேண்டும் என்ற திட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்” என்று தெரிவித்தார்.