சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். பிழைப்புக்காக இல்லாமல் எப்போதும் சிவனையே மனதில் வைத்து வாழும் தீவிர பக்தர்கள். அதிலொரு பக்தர்தான் மெய்ப்பொருள் நாயனார். அவர் விழுப்புரத்துக்கு அருகில் உள்ள திருக்கோவிலூர் என்ற ஊரை ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் தீவிரமான சிவபக்தியும், விசுவாசமான வீரர்களும் இருந்ததால் அவர் யாராலும் வெல்லமுடியாத ஒரு மன்னராய் இருந்தார். வீரத்தில் மட்டுமல்லாது கருணையிலும் உயர்ந்து விளங்கிய அவர், அனைவருக்கும் வாரிவழங்கும் வள்ளலாகவும் இருந்தார். அதனால் அவரை அந்த ஊர் மக்கள் கடவுளுக்கு இணையாய் வணங்கி வழிபட்டனர்.
இதனைக்கண்டு பொறாமைப்பட்ட அண்டை நாட்டு மன்னர்கள் இவரை எப்படியேனும் தோற்கடித்து நாட்டை பிடித்திட பலமுறை முயன்றும் தோற்றுவிட்டனர். விபூதி ருத்ராட்சம் தரித்து வரும் சிவனடியார் யாராக இருப்பினும் அவரை வணங்கும் இவரின் பக்தியை பயன்படுத்தி இவரை வீழ்த்த நினைத்த அண்டை நாட்டு மன்னன் ஒருவன் ஒரு சதித்திட்டம் தீட்டினான். தனது ஒற்றன் ஒருவனை திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேடத்தில் அனுப்பினான். அவன் பெயர் முத்தநாதன்.
அவனும் சிவபக்தர் வேடமிட்டு நாட்டுக்குள் நுழைந்து அரண்மனைக்கு வந்தான். அவனை உண்மையான சிவபக்தன் என நம்பி காவலர்களும் அரண்மனைக்குள் அனுமதித்தனர். அந்த நேரத்தில் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் சபையில் இருந்தார். அரசவைக்கு ஒரு சிவனடியார் வருவதைப்பார்த்த மன்னர் ஓடோடி வந்து முத்தநாதனை வணங்கி வரவேற்றார். சிவனடியார் வேடத்திலிருந்த முத்தநாதன் தன் சதி வேலையைத் துவங்கினான்.
தனக்கு பல சிவமந்திரங்கள் அருளப்பட்டிருப்பதாகவும்., அவற்றை தனியறையில் அவருக்கு வழங்க விரும்புவதாகவும் மன்னரிடம் கூறினான். இதைக்கேட்டு மகிழ்ந்த மன்னன் தனியறையில் அவனை சந்திக்க, இவன் மறைத்து வைத்திருந்த உடைவாளை உருவி மன்னனைக் கத்தியால் குத்தி கொல்ல முயன்றான். இதனைக்கண்ட ஒரு காவலாளி முத்தநாதனை தாக்கி தடுத்திட வருகையில் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் ‘கெடுதல் செய்திருந்தாலும் இவர் சிவனடியார் வேடத்தில் இருக்கிறார்.. இவருக்கு எந்த தீங்கும் நடந்திடா வண்ணம் நாட்டின் எல்லை வரை கொண்டு விட்டுவிட்டு வா’ என்று உத்தரவிட்டார். கொன்றது துரோகியே ஆனாலும், சிவனடியார் வேடம் தரித்ததற்கே அவரை வணங்கும் அளவு தீவிரமான சிவபக்தி இருந்ததால் அவர் ஒரு அற்புதமான நாயன்மாராக வைத்து போற்றப்படுகிறார்.
இத்தகைய நாயன்மார்களை கொண்டாடி பக்தியை வளர்க்க தற்காலத்திலும் நாயன்மார்கள் நம்முடன் வாழ்கிறார்கள். ஈஷாவின் ஆதியோகி ரத யாத்திரை மகாசிவராத்திரி சமயத்தில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாகும். எளிமையான மக்களின் இந்த பக்தி எந்த அளவிற்கு தீவிரமெனில்., சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மகாசிவராத்திரியில் கலந்துகொள்ள பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர். அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்கள் ஆகியோர் கொண்ட ரதங்களை 500 கிலோமீட்டர், 700 கிலோமீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து ரதத்தை இழுத்து வருகின்றனர்.
அவர்களும் அனைவரையும் போல வேலை, தொழில் செய்பவர்கள்தான் என்றாலும் தங்களின் பக்தியின் தீவிரத்தால் உந்தப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாக நடந்தே கோவை ஈஷா மையத்திற்கு வந்து மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பது என்பது அவர்களின் தீவிர சிவபக்தியை பறைசாற்றுகிறது. வயது வித்தியாசமில்லாமல் இந்த யாத்திரையை மேற்கொள்ளும் இவர்கள் இந்த சமுதாயத்தில் நம்முடன் வாழும் நிகழ்கால நாயன்மார்கள் என்பதே நிதர்சனம்.