வடலூர்: வடலூர் சத்தியஞானசபையில் 152வது தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறும்.
இந்த ஆண்டு 152 ஆண்டு தைப்பூச விழாவாக இன்று நடைபெற்றது. இதன் தொடக்கமாக ஜனவரி 28ந்தேதி முதல் 30ந்தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஒதப்பட்டது, ஜனவரி 31ந்தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது. நேற்று (4ம்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங் குழியிலும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது. ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.
சத்தியஞான சபையில் இன்று (5ம் தேதி) காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10மணி, பகல் 1 மணி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தரிசனத்தின்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஒலித்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியை தரிசனம் செய்தனர். மேலும் விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து இரவு 7 மணி, 10மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மறுநாள் (திங்கள்) காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
சத்தியஞான சபையில் இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள் மாவட்ட அறநிலையத் துறையின் அதிகாரி முன்னிலையிலும், அதிகாரிகள் சன்மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள். தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், எம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட அரசு உயர்நிலை அதிகாரிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளி விட்டு பிப்ரவரி 7ம் தேதி பகல் 12மணிமுதல் மாலை 6மணிவரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும். விழாவை முன்னிட்டு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன் தலைமையில் 600 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.