யூ-டியூபர் மாரிதாஸ் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பத்திரிகையாளர்களை சித்தாந்தத்தின் அடிப்படையில் பகிரங்கமாக குற்றம்சாட்டியது, திராவிட கட்சிகள் மீது கடுமையான விமர்சனம், கைது, விசாரணை என அதிரடிகளுக்கு ஆளானவர். இருப்பினும் தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருவதை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் லேட்டஸ்டாக ஒரு வீடியோவை போட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவராக அமர் பிரசாத் ரெட்டி பதவி வகித்து வருகிறார்.
காயத்ரி விவகாரம்
காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட போது, காயத்ரி vs அமர் பிரசாத் ரெட்டி என சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் மாரிதாஸ் தனது வீடியோவில் வார் ரூம் ரெட்டி தன்னை பற்றி விமர்சனம் செய்துள்ளதை சுட்டிக் காட்டி தக்க பதிலடி கொடுத்துள்ளார். காயத்ரியின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்கு மாரிதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
வார் ரூம் அட்ராட்சிட்டி
அதற்கு, வார் ரூம் ஆட்களை கொண்டு காயத்ரி அவர்கள் பேசியதை பற்றி மாரிதாஸ் எதுவும் கேட்கவில்லை என்று ரெட்டி கேள்வி எழுப்ப வைத்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசிய மாரிதாஸ், நான் என்றைக்காவது கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டிருக்கிறேனா? மேலும் யூ-டியூபர் எங்களுக்கு பாடம் நடத்தக் கூடாது என்று கூறுகின்றனர். நான் கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்.
யார் இந்த மாரிதாஸ்?
கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக உறுப்பினராக சேர்ந்து தான் கருத்து சொல்ல வேண்டும் என்றில்லை. யூ-டியூபராக இருந்தும் கருத்து சொல்லலாம். முதலில் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி கட்டுரைகள் எழுதியும், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கியும் தான் பிரபலமடைந்தேன். அதன்பிறகே யூ-டியூப் பிரபலமாக மாறினேன் எனக் குறிப்பிட்டுள்ளார். வார் ரூம் பொறுப்பாளராக இருப்பவர் நல்ல தொடர்பாளராக, குறிக்கோள் கொண்டவராக, விவேகம் மிக்கவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும்.
அமர் பிரசாத் ரெட்டி பின்னணி
ஆனால் அமர் பிரசாத் ரெட்டியின் நேர்மை என்னவென்றால் அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வழிவது தான். கருணாநிதி,
ஸ்டாலின்
, ஓபிஎஸ், ஈபிஎஸ் என ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. தற்போது இவர் மாநில அளவில் பொறுப்பில் இருக்கிறார். இந்த சூழலில் இரண்டாம் நிலை நிர்வாகிகளை அமர் பிரசாத் ரெட்டி நியமித்திருக்கிறார். அதில் ஹரிஷ் என்பவரும் ஒருவர்.
சிக்கலில் ஹரிஷ்
இந்த ஹரிஷ் யாரென்றால் 2,500 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை வாங்கி சுருட்டிக் கொண்டு ஏமாற்றிய ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பங்குதாரர். இதுபற்றி செய்தித்தாள்களிலும் செய்திகள் வந்துள்ளன. இப்படிப்பட்ட நபரை கட்சியில் இணைத்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டால் திமுகவின் திட்டமிட்ட சதி என்று ரெட்டி பதிலளித்துள்ளார்.
பார்ட் – 2 வீடியோ
மேலும் தனக்கு தனிப்பட்ட முறையில் பவ்யமாக மெசேஜ் அனுப்பியதையும், அண்ணாமலைக்கு ஏதாவது எதிர்ப்பு வந்தால் விடமாட்டேன் என்று பகிரங்கமாக போட்ட ட்வீட்டையும் ஒப்பிட்டு மாரிதாஸ் ரெட்டியின் முகத்தை அம்பலப்படுத்தினார். எனவே தான் முன்வைத்த விஷயங்கள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் அமர் பிரசாத் ரெட்டி விளக்கமளிக்க வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவிற்கு இரண்டாம் பாகம் வெளியிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.