நாகை: டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா உள்ளிட்ட பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பொழிந்தது. நேற்று வரை காவிரி டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
நாகையில் 1.40 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சம்பா பயிர்களில் 40,000 ஏக்கரில் மழைநீர் சூழ்ந்தது. மயிலாடுதுறையில் 30,000 ஏக்கர் சம்பா, தாளடி, திருவாரூரில் 15 ஆயிரம் ஏக்கர் சம்பா, தஞ்சையில் 85,000 ஏக்கர் சம்பா, கரூரில் 5,000 ஏக்கர் சம்பா, புதுக்கோட்டையில் 18,000 ஏக்கர் சம்பா, அரியலூரில் 5,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. மொத்தத்தில் டெல்டாவில் 2.28 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.
மேலும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தாண்டவமூர்த்திகாடு, காமேஸ்வரம், பூவைத்தேடி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு, பொய்கைநல்லூர் பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலையில் 1,000 ஏக்கர் நீரில் மூழ்கியது. 20 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர்கள் தண்ணீர் வடிய வழியின்றி அழுகும் நிலையில் உள்ளது. இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
முதல்வரின் உத்தரவுப்படி டெல்டாவில் இன்று அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவும், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இன்னொரு குழுவும் தனித்தனியாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டது. டெல்டாவில் மழையால் பயிர்கள் பாதிப்பு குறித்த அறிக்கையை இந்தக்குழுவினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நாளை சமர்ப்பிக்கின்றனர்.