இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கல்வானில் சீன ராணுவ வீரர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது.
ஆனால் நான்கு ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீனா உறுதி செய்தது. அனால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய நாளிதழில் வெளியிட்ட செய்தியின்படி கல்வானில் நான்கு சீன வீரர்கள் அல்ல, சீனாவுக்கு அதை விட பல மடங்கு இழப்பாக குறைந்தது 38 வீரர்கள் வரை இறந்ததாகக் கூறியிருந்தது.
இப்படியாக இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீன செயலிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியர்களின் தகவல்களை திருடுவதாகவும், அதனை வைத்து வியாபாரம் செய்வதாகவும் சீன செயலிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவும் 69ஏ-ன் கீழ் பல்வேறு சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
2020ம் ஆண்டின் இறுதியில் 59 சீன ஆப்கள் நிரந்தரமாக தடை செய்யப்படுவதாக இந்திய சைபர் கிரைம் ஒத்துழைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அதிரடியாக அறிவித்தது. அதன்படி டிக்-டாக், ஷேர் இட், யூசி ப்ரௌசர், ஹலோ, அலி எக்ஸ்பிரஸ், லைகி, மி கம்யூனிட்டி, வீ சேட் உள்ளிட்ட 59 சீன செயலிகள் நிரந்தரமாக முடக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, வீசாட், பைடு, மொபைல் கேம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதே ஆண்டு ஆண்டு நவம்பர் மாதம் 43 ஆப்கள் தடை செய்யப்பட்டன. கடந்தாண்டு கூட இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் விதமாக செயல்பட்ட 54 சீனா ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. பயனாளர்களின் முக்கிய தரவுகளை எடுப்பதற்கு அனுமதி கேட்ட அந்த ஆப், அதில் கிடைத்தத் தரவுகளை குறிப்பிட்ட விரோத நாட்டுக்கு அனுப்பப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியிருந்தது.
அனைவரையும் சண்டைக்கு இழுக்கும் ஒன்றிய அரசு; அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்.!
இந்நிலையில், சூதாட்டத்தை ஊக்குவிக்கும் மற்றும் கடன் செயலிகள் உள்ளிட்ட 232 சீன செயலிகளை ஒன்றிய அரசு தடைச் செய்துள்ளது. சூதாட்டத்தில் ஈடுபடும் 138 பெட்டிங் ஆப்கள் மற்றும் 94 கடன் ஆப்களுக்கு ஒன்றிய அரசு தற்போதுத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் படி, ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.