அரசியலில் எது நடந்தாலும் இது மட்டும் கண்டிப்பாக நடக்காது – ஜெயக்குமார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர்  வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ” திமுக, அரசு இயந்திரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தாமல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது.  பணத்தை வாரி வாரி செலவழித்து, ஒட்டுமொத்த அமைச்சர்களும் திமுகவினர்களும் அங்கே முகாமிட்டு செயலாற்றி வந்தாலும் அதிமுக அங்கு அமோக வெற்றி பெறும்.

அமைச்சர்கள் ஒவ்வொரு‌ பூத்துகளுக்கும் வரும் போது ‌‌ ஆராத்தி வெற்றிலை, பாக்கு தேங்காய், சொம்பு அதில் ஒரு ஆயிரம் ரூபாய் வைத்து மக்களுக்கு வழங்குகிறார்கள். தேர்தல் வந்தால்தான் மக்கள் கண்ணுக்கு தெரிவார்கள். இல்லையென்றால் தெரிய மாட்டார்கள் என குற்றம் சாட்டினார்.  சுவர் விளம்பரங்களிலும் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனர். இதை எல்லாம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.  அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்ன சொல்லி இருக்கிறார்கள்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளது.  குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.  

ஓபிஎஸ் தரப்பினர் தென்னரசு என்ற பெயரையே சொல்ல வலிக்கிறது. இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது என்பது முரண்பாடானது.  நட்சத்திர பேச்சாளர்களுடைய பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.  பொதுக்குழு உறுப்பினர்களுக்கான கடிதம் கொடுக்கவில்லை என்பது குறித்து சி.வி சண்முகம், தமிழ் மகன் உசேன் ஆகியோர் டெல்லியிலேயே கூறிவிட்டனர். அது குறித்து நான் பேச விரும்பவில்லை.  அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது. ஓபிஎஸ் தொடர்ந்து திமுகவின் பிடிமாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.  இரட்டை இலை முடக்க முயற்சி மேற்கொண்டு முடியாத நிலையில் இவ்வாறான பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது”, என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.