அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு 2-ம் நாளாக பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக இரண்டு இடங்களில் தனித்தனியாக பருத்தி ஏலம் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருமையங்களில் நடைபெறும் இடங்களில் பங்கேற்று தங்களது பருத்தி மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஏலத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி 10 லட்சம் ரூபாய்க்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது. இதில் திருப்பூர், கோவை , திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வருகை தந்து பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து ஏலம் எடுத்தனர். அதேசமயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 150-க்கு மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் நேற்று ஏலம் போகவில்லை.

இதனை பார்வையிட வந்த வியாபாரிகளை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி எடுக்கக் கூடாது என கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் அங்கு வந்த வியாபாரிகள் பருத்திக்கு விலை நிர்ணயம் செய்யாமல் திரும்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இரவு 8 மணி வரை பருத்தி ஏலம் நடைபெறாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் சமரசம் செய்து இன்று வியாபாரிகள் வரவழைக்கப்பட்டு ஏலம் நடைபெறும் என சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்காக, இன்று காலை முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு மீண்டும் வருகை தந்து விவசாயிகள் காத்திருந்தனர்.

பிற்பகல் வரை வியாபாரிகள் யாரும் வராததால் பருத்தி ஏலம் நடைபெறவில்லை. பருத்தி மூட்டைகள் கொண்டு வந்து இரண்டு நாட்களாக காத்திருந்த விவசாயிகள் இதனால் விரக்தி அடைந்தனர்.

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் என இரு ஏல மையங்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சினையால் இரண்டு நாட்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பருத்தி மூட்டைகளுடன் குடோனில் காத்திருக்கும் சூழல் நிலவுவதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.