" `ஆபாச வீடியோவை வெளியிடுவேன்' என மிரட்டுகிறார்!" – காவலர்மீது கணவரைப் பிரிந்து வாழும் பெண் புகார்

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், “நான் கடந்த 7.7.2022-ம் தேதி காவலர் செல்லதுரை என்பவர்மீது புகாரளித்தேன். அதன்பேரில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸார், என்னை விசாரணைக்காக நேரில் வரச் சொல்லியிருந்தார்கள். அதைத் தெரிந்துகொண்ட காவலர் செல்லதுரை என்னை வழிமறித்து அவர்மீது கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என மிரட்டினார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

அப்படி செய்யவில்லை என்றால், `உன்னையும் உன் பிள்ளைகளையும் காலி செய்து விடுவேன்’ என மிரட்டினார். மேலும், `நாம் இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்த நாள்களில் ஒன்றாக இருந்ததை போனில் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறேன். அதை சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன். உன் பிள்ளைகளின் வாட்ஸ்அப் நம்பருக்கும் அனுப்பி வைத்துவிடுவேன்’ என்று மிரட்டினார். அதனால் வேறுவழியில்லாமல் புகார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். மேலும் விசாரணை அதிகாரியின் முன் ஆஜராகக் கூடாது என கட்டாயப்படுத்தியதால், கடந்த 28.11.2022-ம் தேதி நடந்த விசாரணைக்கு நான் ஆஜராகவில்லை. அத்துடன் பிரச்னை முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் அந்த வீடியோவைக் காட்டி என்னிடமிருந்து அடிக்கடி பணம் பறித்துக் கொண்டார். இனிமேல் என்னிடம் கொடுக்க பணம் இல்லை. உயிர்மட்டும்தான் இருக்கிறது.

நான் தற்கொலை செய்துகொண்டால் என் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கண்ணியம்மிக்க காவல்துறையில் பணிபுரியும் காவலரே என்னுடைய பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தியதால், நான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். எனவே செல்லதுரையின் செல்போனைப் பறிமுதல் செய்து, நான் சம்பந்தப்பட்ட வீடியோவை அழித்துவிட்டு, செல்லதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து புகாரளித்த பெண்ணிடம் பேசினோம். “எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் மூலம் காவலர் செல்லதுரை அறிமுகமாகினார். நானும் கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு வாழ்ந்து வந்தேன். அப்போது காவலர் செல்லதுரையும் தனக்கு திருமணமாகி விவகாரத்தாகிவிட்டது என்று கூறி என்னுடன் பழகினார்.

போலீஸ்

பின்னர் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். அப்போது திருமணம் செய்துகொள்ள அவரை வற்புறுத்தினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்து வந்தார். கார் ஒன்றை வாங்க முன்பதிவுசெய்ய கட்டாயப்படுத்தினார். அவருக்குப் பணம் அனுப்பியதற்கான ஆதாரமும் காரை முன்பதிவுசெய்ததற்கான ஆதாரமும் என்னிடமிருக்கிறது. அவர் காவலராக இருப்பதால் போலீஸார் செல்லதுரை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நாங்கள் இருவரும் தனிமையிலிருந்த வீடியோக்களை வெளியிட்டுவிடுவதாக செல்லதுரை மிரட்டி வருகிறார். அதற்கான ஆடியோ ஆதாரமும் என்னிடம் இருக்கிறது” என்றார்.

இது குறித்து காவலர் செல்லதுரையிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அவர் பதிலளிக்கும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பிறகு பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்த போலீஸார் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.