ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் – அழைப்பு இல்லாததால் பாஜக புறக்கணிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அழைப்பு இல்லாததால், வேட்புமனு தாக்கலின்போது பாஜகவினர் பங்கேற்கவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 3-ம் தேதி கே.எஸ். தென்னரசு வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென அவரது வேட்பு மனுத் தாக்கல் ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் அதே நாளில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் பரிந்துரைப்படி, கே.எஸ்.தென்னரசு அங்கீகரிக்கப்பட்ட அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தாக்கல் செய்தார். இதில், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவமும் இடம்பெற்று இருந்தது. அவருடன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம், நிர்வாகிகள் மனோகரன், பாவை அருணாசலம் மற்றும் தமாகா இளைஞரணித் தலைவர் எம் யுவராஜா ஆகியோர் மனு தாக்கலின்போது உடனிருந்தனர். தென்னரசுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி பத்மினி தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்.

கூட்டணிக் கட்சிகள் தவிர்ப்பு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என எழுதப்பட்டு, அதன்பின் முற்போக்கு என்ற வாசகம் நீக்கப்பட்டது. அதன்பின் அதேநாள் இரவில் அதிமுக தலைமையிலான கூட்டணி என மாற்றப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி படங்கள் மட்டும் தேர்தல் பணிமனையில் உள்ளன.

இந்த நிகழ்வுக்குப் பின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பழனிசாமியை சந்தித்து பேசினாலும், தேர்தல் பணிமனையில் பாஜக கொடியோ, தலைவர்கள் படமோ இடம்பெறவில்லை.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின்போதும் பாஜக நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால், கூட்டணிக் கட்சியான தமாகாவின் யுவராஜ் மட்டும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தார்.

திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் மனுத் தாக்கலின்போது, திமுக, காங்கிரஸ், மதிமுக நிர்வாகிகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதிமுக வேட்பாளர் மனு தாக்கலின்போது கூட்டணிக் கட்சியான பாஜக புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.