ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் இருந்து அமமுக விலகல் – டிடிவி தினகரன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இடைத்தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அமமுக சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிவபிரசாந்த் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக அமமுக கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் கழகம் போட்டியில்லை.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கழகத்தின் சார்பில் 27.01.2023 மற்றும் 31.01.2023 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுத்தேர்தல் காலங்களில் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தற்போது இடைத்தேர்தல் காலங்களில் அவ்வாறு ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துள்ளது.

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்போம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இந்தநிலையில், ஓபிஎஸ்- உடன் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் திடீரென சின்னத்தை காரணம் காட்டி தேர்தலில் இருந்து விலகியிருப்பது, உள்நோக்கம் இருக்கலாம் என்றும் விவாதிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.