உளவு பலுானின் உதிரி பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுப்பு| US refuses to hand over spy plane spare parts to China

வாஷிங்டன், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலுானில் இருந்து மீட்கப்படும் மிச்சங்கள், உதிரி பாகங்கள், கருவிகளை சீனாவிடம் திருப்பி அளிக்க மாட்டோம்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வான்வெளியில், 60 ஆயிரம் அடி உயரத்தில், சீன உளவு பலுான் பறப்பதை அமெரிக்கா கடந்த வாரம் கண்டறிந்தது. உடனடியாக அந்த பலுான் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

நவீன கருவிகள்

இது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தகவல் தெரிவித்ததும், பலுானை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார்.

இதை நிலப்பரப்பில் பறக்கையில் சுட்டு வீழ்த்தினால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அமெரிக்க ராணுவம் தொடர்ந்துகண்காணித்தது.

வட அமெரிக்காவின் கனடா வான்வெளிக்குள் நுழைந்த அந்த உளவு பலுான் மீண்டும் அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதிக்கு வந்தது.

கடந்த 5ம் தேதியன்று தெற்கு கரோலினா அருகே உள்ள அட்லான்டிக் கடல் மீது பறக்கையில், அந்த சீன உளவு பலுானை அமெரிக்க போர் விமானம் அதிரடியாக சுட்டு வீழ்த்தியது.

பலுானின் மிச்சங்கள், உதிரி பாகங்கள் மற்றும் நவீன கருவிகள் கடலுக்குள் விழுந்தன. இதை மீட்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.

தகவல்கள் சேகரிப்பு

இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:

சீனாவின் உளவு பலுான் சர்வதேச விதிகளையும், இறையாண்மையையும் மீறியுள்ளது.

கடலில் விழுந்துள்ள பலுானின் மிச்சங்கள், உதிரி பாகங்கள் மற்றும் கருவிகளை மீட்கும் பணி நடக்கிறது. சில பாகங்களையும், கருவிகளையும் மீட்டுள்ளோம். அவற்றை சீனாவிடம் திருப்பி அளிக்க மாட்டோம்.

அந்த பலுானை சுட்டு வீழ்த்துவதற்கு முன், அது குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்துவிட்டோம்.

இந்த தகவல்களை ஆய்வு செய்து வருகிறோம். பலுானின் மிச்சங்கள், உதிரி பாகங்கள் மற்றும் கருவிகளை மீட்ட பின், உளவு பலுான் குறித்து மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.