“என் நீட் ஆதரவு கருத்தை மருத்துவத் துறை பற்றி தெரியாதோர் விமர்சனம் செய்வதுதான் ஆச்சரியம்” – தமிழிசை

புதுச்சேரி: “நீட் ஆதரவு கருத்தால் மருத்துவத்தை பற்றியோ, மருத்துவத் துறை அடிப்படையோ தெரியாதோர் விமர்சனம் செய்வதுதான் ஆச்சரியம்” என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித் துறை சார்பில் “ஹெல்த் கனெக்ட் – புதுச்சேரி” கருத்தரங்கம் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்ம ஸ்ரீ விருதாளர் டாக்டர் நளினி, சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீ ராமுலு, பல்வேறு மருத்துவக் குழுக்களின் பிரதிநிதிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஹெல்த் கனெக்ட் நிகழ்வினை தொடங்கி வைத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பேசியது: “குறைபாடுகள் உடன் குழந்தைகள் பிறக்கும்போது, நுண்ணிய குறைபாட்டை கண்டறிருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றும். பிறப்பதற்கு முன்பே சரி செய்யும் வாய்ப்புகளை கண்டறிந்திருக்க முடியும் என பல நாட்கள் நினைத்ததுண்டு.

குழந்தை பிறப்பானது ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடும் நிகழ்வு. குறைபாடுடன் குழந்தை பிறந்தால் அதனால் அக்குடும்பம் படும் துன்பம் அளப்பரியது. அது அன்றைய தினத்தோடு போய்விடாது. நுண்ணியமாக பார்க்கும்போது சிறப்பு சிகிச்சை தந்தால் இயல்பான சூழலுக்கு கொண்டு வரமுடியும். விற்பனர்கள் அதிகளவில் இதில் வரவேண்டும்.

லாபநோக்கை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சேவை மருத்துவர்கள் வரவேண்டும். மரபணு மற்றும் அரிதான நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் வாதியாக இருப்பதால் மருத்துவத் துறையின் விற்பனராக இருப்பதை பலரும் ஒத்துக் கொள்வதில்லை. சில பேரிடம் இலகுவாக பழகும்போது எளிமையாக எடுத்து விடுகின்றனர்.

நல்ல மருத்துவர்கள், ஏழ்மை நிலையில்லோர் மருத்துவத்துக்கு வர நீட் ஆதரவு கருத்து சொன்னேன். மருத்துவத்தை பற்றியோ, மருத்துவத் துறை பற்றி அடிப்படை தெரியாதோர் இதில் விமர்சனம் செய்வதுதான் ஆச்சரியம். இணையத்தளத்தில் என்னைப் பற்றி மோசமாக விமர்சித்து எழுதுகின்றனர். எனது மருத்துவ முகத்தை அறியாமல் பரிசகிக்கிறார்கள்.

எத்தனையோ பேரை காப்பாற்றியவள் நான். சமூகத்திலும் பலரை காப்பாற்றவே பொது வாழ்க்கைக்கு வந்தேன். மருத்துவத்தில் உச்சநிலையில் இருந்தபோது பொது சேவைக்கு வந்தேன். மருத்துவத்தை பற்றியோ, மருத்துவ அறிவாற்றல் இல்லாமலும் என்னை விமர்சிப்பதுதான் கருத்து சுதந்திரம். அதையும் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டார். அதையடுத்து வழக்கமாக செய்தியாளர்களை சந்திக்கும் தமிழிசை, சந்திப்பை தவிர்த்து விட்டு புறப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.