திருச்சி: நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் இறையூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்தது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக தனிப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு-வீடாக சென்று விசாரணை நடத்தினர்.
திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 பேர் கொண்ட 10 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் நேற்று காலை திருச்சி ஜெயில் கார்னரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களது வாக்குமூலத்தை சிபிசிஐடி அதிகாரிகள் பதிவு செய்ததாக தெரிகிறது.