குளிர்காலத்தில் பராமரிப்பதில் சிரமம்; கருப்பட்டி விலை கடும் உயர்வு: கிலோ ரூ.330 வரை விற்பனை

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாட்டி வதைத்து வரும் குளிர் காரணமாக கருப்பட்டி விலை கிலோ ரூ.330ஐ தொட்டு கொண்டுள்ளது. கிராம மக்களின் பயன்பாட்டில் முக்கிய இடம் பெற்ற கருப்பட்டி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை வட்டாரம், தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, சாத்தான்குளம், விளாத்திகுளம் வட்டாரத்தில் கருப்பட்டி அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளான தண்டுபத்து, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் பல குடும்பங்கள் கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு உற்பத்தி செய்யும் தொழிலை நடத்தி வருகின்றன.

உடன்குடி, வேம்பார் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கருப்பட்டி உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிட்டங்கிகளில் சேமித்து வைத்து மொத்த மற்றும் சில்லறைக்கு விற்பனை செய்வது வழக்கம். வெளியூர் மற்றும் வெளிமாநிலம் செல்வோர் விரும்பி வாங்கும் பொருளாக கருப்பட்டி உள்ளது. மருந்துவம் சார்ந்த பொருளாகவும் கருப்பட்டி பொதுமக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருவதால், அதன் தேவை எப்போது அதிகம்.

கருப்பட்டியில் இருந்து தயாரிக்கப்படும் சுக்கு கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்கள் ரயில் நிலையம் தொடங்கி, நகர்புற கடைகளில் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை கடந்த 40 தினங்களாக குளிர் வாட்டி வதைத்து வருவதால் கருப்பட்டியை கெடாமல் பாதுகாக்க முடியவில்லை என வியாபாரிகள் புலம்பி வருகின்றனர். இவ்வாண்டு இவ்விரு மாவட்டங்களில் மழை பொழிவு குறைந்த நிலையில், மழை காலத்திலேயே அதிக குளிர் காணப்பட்டது. இதன் காரணமாக குளிர் நேரத்தில் கருப்பட்டி இளகிய தன்மைக்கு செல்லாமல் தடுக்க பராமரிப்பு அவசியமாக உள்ளது.

கருப்பட்டியை குளிர்காலத்தில் இளகாமல் பாதுகாக்க பழங்கால கட்டிடங்களே முன்னிற்கின்றன. அவற்றை குடோனாக வைத்திருப்பவர்கள் ஓரளவுக்கு கருப்பட்டியை கெடாமல் பாதுகாத்து கொள்கின்றனர். மற்றபடி சாதாரண கட்டிடங்களில் கருப்பட்டி சிப்பம் கட்டி வைத்திருப்பவர்கள் தேங்காய் சிரட்டைகள் மூலம் நெருப்பு மூட்டியும், வெப்பத்திற்காக அதிக மின்விளக்குகளை எரியவிட்டும், மின்விசிறிகளை இரவு பகலாக ஓடவிட்டும் பாதுகாத்து வருகின்றனர். இதனால் கூடுதல் செலவுகள் வியாபாரிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

எனவே கடந்த 10 தினங்களாக கருப்பட்டியின் விலை ஏற தொடங்கியுள்ளது. கிலோ ரூ.280க்கு விற்ற புது கருப்பட்டி தற்போது ரூ.310 முதல் ரூ.330 வரை விற்கப்பட்டு வருகிறது. பழைய கருப்பட்டிகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. பழைய கருப்பட்டிகள் முன்பு ரூ.350க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூ.400ஐ தொட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து கருப்பட்டி வியாபாரிகள் கூறுகையில், ‘‘ கருப்பட்டி நோய் எதிர்ப்பு சக்தியும், மருத்துவ குணமும் கொண்டதாக இருப்பதால், அதற்கான தேவைகள் எப்போதும் அதிகம்.

நகர்புறங்களில் சீனியின் பயன்பாடு அதிகம் இருப்பினும், இன்னமும் பழமை மாறாமல் கருப்பட்டி வாங்கி பயன்படுத்துவோரும் அதிகம். மற்ற காலங்களை விட குளிர் காலங்களில் கருப்பட்டிக்கு கூடுதல் பராமரிப்பு தேவை, எனவே பராமரிப்பு மற்றும் இதர செலவுகளை கணக்கில் கொண்டு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கோடை காலம் வந்த பின்னர் பதநீர் உற்பத்தி கூடுவதோடு, கருப்பட்டி விலையும் ஓரளவுக்கு குறையும் என நம்புகிறோம்’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.