கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு வழக்கில், உயிரிழந்த நபரின் மனைவியிடம் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கோயம்புத்தூர் கொட்ட ஈஸ்வரன் கோவில் முன்பு காரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஜமேசா முபினீன் என்ற வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபினீன் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் என்று அனைவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ஜமேசா முபினீன் மனைவி நஷ்ரத்தை மட்டும் வாக்குமூலம் பெறுவதற்காக என்ஐஏ அதிகாரிகள் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு, நீதிபதி சரவணபாபு முன்னிலையில் முபினின் மனைவி ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இருப்பினும், முபினின் மனைவி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், சைகைமொழி பெயர்ப்பாளர் உதவியுடன் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்துகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.