செவிலியர் குறித்து பேசியதற்காக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த பாலகிருஷ்ணா

ஒரு பக்கம் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி ஷோவையும் நடத்தி வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் பிரபல நட்சத்திரங்கள் பங்கு பெறுவது வழக்கம். அப்படி சமீபத்திய எபிசோடுகளில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பவன் கல்யாணிடமிருந்து பல சுவாரசியமான விஷயங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறார் பாலகிருஷ்ணா. அதேசமயம் இந்த நிகழ்ச்சியில் செவிலியர் ஒருவரை பற்றி பேசும்போது சற்று ஆபாசமான தொனியில் அவர் பேசிய வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஒரு முறை தான் விபத்தில் சிக்கி பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சென்றதாகவும் அப்போது தன்னிடம் நண்பர்கள் சிலர் விபத்தில் அடிபட்டதாக மருத்துவமனை ஊழியர்களிடம் கூற வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர் என்றும் கூறினார். ஆனாலும் ஒரு செம ஹாட்டான செவிலியர் ஒருவரை பார்த்ததும் நண்பர்கள் எச்சரிக்கையையும் மீறி அவரிடம் நடந்ததை கூறிவிட்டேன் என்று கூறியிருந்தார் பாலகிருஷ்ணா.

அவர் அந்த செவிலியர் பற்றி குறிப்பிட்ட வார்த்தையும் அதை அவர் உச்சரித்த விதமும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல செவிலியர்கள் பலரிடம் இருந்தும் பாலகிருஷ்ணா தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற விதமாக எதிர்ப்பு வலுத்தது. இந்த நிலையில் இதை உணர்ந்த பாலகிருஷ்ணா, தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

தான் எப்போதுமே செவிலியர்களையும் அவர்களது தன்னலமற்ற பணியையும் உயர்ந்த இடத்தில் வைத்து மரியாதை செய்து வருகிறேன் என்றும் தன்னுடைய மருத்துவமனையில் கூட அவர்களது அயராத சேவையை பார்த்து பெருமைப்பட்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் நான் அந்த நிகழ்ச்சியில் சொன்ன வார்த்தைகள் தவறாக திரிக்கப்பட்டு வெளியிலே பரவி விட்டது என்றும் அப்படி தன்னுடைய வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தி இருக்குமேயானால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் பாலகிருஷ்ணா.

சில நாட்களுக்கு முன்பு இதேபோல, தான் நடித்த வீரசிம்ஹா ரெட்டி படத்தின் வெற்றி சந்திப்பில் பேசும்போது கூட தெலுங்கு சினிமாவில் பிரபல மூத்த கலைஞர்களான மறைந்த கிருஷ்ணா மற்றும் நாகேஸ்வரராவ் குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் கிண்டலடித்தார் பாலகிருஷ்ணா. அதுகுறித்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியதும் தான் அவ்வாறு கூறவில்லை என பாலகிருஷ்ணா பல்டி அடித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.