புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 20 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்து இருப்பதாக திமுக எம்பி கனிமொழி மக்களவையில் குற்றம் சாட்டினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று மக்களவை திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி எம்பி பங்கேற்றுபேசினார். அப்போது அவர் பேசியதாவது; பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு இந்த ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒற்றைக் கலாசாரம்தான் என்ற கருத்தியலை உருவாக்க முயல்கிறது. ஒரே தேசம், ஒரே ரேசன், ஒரே தேசம் ஒரே வரி, ஒரே தேசம் ஒரே சந்தை, ஒரே தேசம் ஒரே மொழி, ஒரே தேசம் ஒரே தேர்வு, ஒரே தேசம் ஒரே தேர்தல், ஒரே தேசம் ஒரே கட்சி என்பதை நோக்கித்தான் நீங்கள் செல்கிறீர்கள். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். அது எப்போதும் நடக்காது. நீங்கள் மாநிலங்களின் அதிகாரங்களை தொடர்ந்து குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.
இப்போதும் கூட தமிழ்நாடு ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுமார் இருபது சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். ஆனால் இதையெல்லாம் நீங்கள் கேட்க மாட்டீர்கள். இங்கே ராகுல் காந்தி பேசும்போது கூட நீங்கள் குரல் எழுப்பிக் கொண்டிருந்தீர்கள். கவனிப்பது, கற்றுக் கொள்வது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதது. ஆனால் ஆளுங்கட்சியினர் இதையெல்லாம் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அவர்கள் கார்ப்பரேட் நிர்வாகக் குளறுபடிக்கும், அதானிக்கும் ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு தோள்கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இவ்வாறு உங்களது அரசின் தவறான நிர்வாகத்தை எதிர்த்துப் பேசினால் உங்களின் ஒரே பதில், ‘இது தேசத்துக்கு எதிரானது, இது இந்தியாவுக்கு எதிரானது’ என்பதுதான். அதானி நிறுவனம் பற்றி ஆய்வு அறிக்கை வெளியிட்ட அதே ஹிண்டென்பர்க் நிறுவனம் அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களைப் பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த நாடுகள் எல்லாம், ‘இது எங்கள் நாட்டுக்கு எதிரானது’ என்று சொல்லவில்லை. ஆனால் அதானிக்கு எதிராகப் பேசினால் அது தேசத்துக்கு எதிராக பேசுவதாக நீங்கள் சித்திரிக்கிறீர்கள். இந்தியாதான் அதானியா என்று எங்களுக்கு குழப்பமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நான்கு வருடங்களுக்கு முன் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்படது. அதன் பின் எந்த வேலையும் நடக்கவில்லை, அதுமட்டுமல்ல… தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் அமைய 13 ஆண்டுகளுக்கு முன்பு 116 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு இலவசமாக கொடுத்தது. ஆனால் இன்னமும் அத்திட்டத்துக்காக காத்திருக்கிறோம். நீட் தேர்வு வந்தால் மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் முறைப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இப்படி நீங்கள் தொடர்ந்து எங்களை அவமதித்தால், புறக்கணித்தால் நாங்கள் உங்களோடு இணைந்து நடக்க முடியாது. இந்த நாட்டு மக்கள் உங்களோடு இணைந்து நடக்க மாட்டார்கள். இவ்வாறு பேசினார்.