தி.நகர் ஸ்கைவாக்: ரெடியாகும் ஃபினிஷிங் டச்… வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!

சென்னை மாநகரில் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக தியாகராய நகர் திகழ்கிறது. இங்குள்ள ரங்கநாதன் தெரு, சத்யா பஜார் உள்ளிட்டவற்றில் ஏராளமான கடைகள் இருக்கின்றன. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. மொத்தமாகவும், சில்லறையாகவும் பொருட்கள் வாங்க வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பலரும் வருகை புரிகின்றனர்.

தி.நகர் இடநெருக்கடி

நடந்து செல்வதற்கு கூட இடமிருக்காது. அப்படியிருக்கையில் வாகனங்கள் எங்கே பயணிக்க முடியும். அந்த அளவிற்கு நெரிசல் மிகுந்த பகுதியாக தி.நகர் மாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்கு நடைமேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்மூலம் ஓரளவு நெரிசலை குறைக்கலாம் என திட்டமிடப்பட்டது.

பணிகள் பாதிப்பு

கடந்த 2020ஆம் ஆண்டு 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. இது 600 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். 15 மாதங்களில் பணிகளை முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை ஏற்படுத்தியது. ஊழியர்கள் சரிவர பணிக்கு வராதது, ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை, மேம்பால திட்ட வடிவமைப்புகளில் செய்யப்பட்ட மாற்றம் போன்ற விஷயங்களால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

திறப்பு விழா ஏற்பாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும், அதே போன்ற சூழலை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு பாதியில் இருந்து பணிகள் வேகமெடுத்தன. இந்நிலையில் இம்மாத இறுதியில் திறப்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாம்பலம் ரயில் நிலையத்தை தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

லிப்ட் வசதிகள்

தி.நகர் ஷாப்பிங் ஏரியாவில் ஆயிரக்கணக்கானோர் சென்று வருவதை பார்க்கலாம். இவர்களுக்கு தி.நகர் ஸ்கைவாக் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், லிப்ட் வசதிகள் மட்டும் அமைக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு வாரத்தில்

இது அடுத்த ஒருவாரத்திற்குள் முடிவடைந்து விடும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி சேவை அளிக்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் லிப்டில் ஏறி அதன்பிறகு ஸ்கைவாக்கில் எளிதாக பயணிக்கலாம் என்று கூறினார். பாதசாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் வியாபாரிகள் யாரும் ஸ்கைவாக்கை ஆக்கிரமிக்காமல் தினசரி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டனர்.

தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தி.நகர் ஸ்கைவாக் பணிகளை அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.