துருக்கி-சிரியாவில் 5000 பேர் பலி; இந்தியாவில் பூகம்பம் வந்தால் எங்கே பாதிப்பு அதிகமாக இருக்கும்?

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவில் பூகம்பங்கள் வந்தால் எந்தளவுக்கு பாதிப்பு இருக்கும்? எந்த பகுதி அதிகமாகப் பாதிக்கப்படும்? இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி மனதில் எழுகிறது. அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 59 சதவிகிதம் பகுதிகள் வெவ்வேறு அளவு நிலநடுக்கங்களால் பாதிக்கப்படக்கூடியது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகரங்கள் “மண்டலம்-5” இல் அடங்கும். அதாவது அங்கு அதிக தீவிரம் கொண்ட பூகம்பங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. தேசிய தலைநகர் மண்டலம் (Delhi NCR) மண்டலம்-4ல் வருகிறது. இது இரண்டாவது தீவிரமான அபாயம் வகையாகும். இதனால்தான் அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகிறது.

அதிர்வு மண்டலங்கள் என்றால் என்ன?
இந்தியாவில் எந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், எங்கு குறைவு என்பது பூமியின் உள் அடுக்குகளின் புவியியல் இயக்கங்களை சார்ந்து பிரிக்கப்படுகிறது. இந்தியாவில் 4 நில அதிர்வு மண்டலங்களாக (மண்டலம் 2, 3, 4 மற்றும் 5) எனப் பிரித்துள்ளனர். மண்டலம் 5 என்பது மிகவும் தீவிரமான நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி. அதே சமயம் மண்டலம் 2 இல் மிகக் குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கம் ஏற்படுகிறது. நாட்டின் சுமார் 11% பகுதி மண்டலம் 5 கீழும், 18% மண்டலம் 4-ல் கீழும், 30% மண்டலம் 3-ல் கீழும், மற்றவை மண்டலம் 2ல் உள்ளன. மத்திய இமயமலைப் பகுதியானது உலகில் நில அதிர்வுகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றாகும். 1905 இல் காங்க்ராவில் நிலநடுக்கத்தின் வலுவான நடுக்கம் உணரப்பட்டது.

மண்டலம் 5-ல் உள்ள மாநிலங்களுக்கு அதிக அபாயம் 
மண்டலம் 5ல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குஜராத், இமாச்சலப் பிரதேசம், பீகார், அசாம், மணிப்பூர், நாகாலாந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகியவை அடங்கும். நில அதிர்வுக்கான தேசிய மையம், புவி அறிவியல் அமைச்சகம் என்பது இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும், இது நில அதிர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பல்வேறு நடவடிக்கைகளை கையாள்கிறது. இதில் 115 கண்காணிப்பு மையங்கள் உள்ளன. அவர்கள் நில அதிர்வு நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள்.

சென்னையில் ஆபத்து குறைவு
அறிக்கைகளின்படி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரூ போன்ற பெரிய நகரங்கள் 3வது மண்டலத்தில் வருகிறது. டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் குருகிராம் மிகவும் ஆபத்தான பகுதி என்று நிபுணர்கள் கூறுகின்றனர், அதிக தீவிரம் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டால், அழிவை பயங்கரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

நாட்டில் பெரும் அழிவை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள்

1934 ஆம் ஆண்டில், பீகார்-நேபாள பகுதியில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தீவிரம் 8.2 ஆக இருந்தது. இந்த இயற்கை பேரிடரில் 10,000 பேர் பலியாகினர்.

1991 ஆம் ஆண்டு உத்தரகாசியில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2001 ஆம் ஆண்டில், குஜராத்தின் பூஜ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2005 ஆம் ஆண்டில் காஷ்மீரில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80,000 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.