துருக்கி, சிரியா பூகம்பம்: 5,000-ஐ கடந்த உயிரிழப்பு; தொடரும் மீட்புப் பணிகள்

அங்காரா: துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இரு நாடுகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து வருகிறது.

சிரியாவை ஒட்டிய துருக்கி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பூகம்பம், இரு நாடுகளிலும் பெருத்த உயிர் மற்றும் பொருட் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,534 ஆகவும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் துணை அதிபர் ஃபாட் ஒக்தே தெரிவித்துள்ளார்.

இதனிடயே, சிரியாவில் பலி எண்ணிக்கை 1,602 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் இரு நாடுகளிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,102 ஆக அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட முதல் பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து, மேலும் இரண்டு பூகம்பங்கள் நேரிட்டன. அதோடு, 200-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) நேரிட்ட 4-வது நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.

தொடர் பூகம்பங்கள், நில அதிர்வுகளாலும், உரைய வைக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் ஃபரத்தீன் கோக்கோ தெரிவித்துள்ளார்.

5600 கட்டிடங்கள் தரைமட்டம்: பூகம்பத்தால் உலுக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் 5,600 கட்டிடங்கள் தரைமட்டமாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பல கட்டிடங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த சிரியா, மெல்ல மீண்டு கொண்டிருந்த நிலையில், அந்நாட்டு மக்களை இந்த நிலநடுக்கம் மீண்டும் பெருந்துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது குறித்து நார்வே அகதிகள் அமைப்பு கூறும்போது, “உள்நாட்டுப் போரினால் உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது” என்றது.

போரினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த சிரியாவின் வடக்குப் பகுதி மக்கள், இந்த பூகம்பத்தால் மிகுந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்திய விமானப் படையைச் சேர்ந்த மேலும் 2 விமானங்களில் மீட்புப் படையினரையும், நிவாரணப் பொருட்களையும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா அனுப்புகிறது. | வாசிக்க > மீட்புப் படை, நிவாரணப் பொருட்களுடன் மேலும் 2 விமானங்களை பூகம்பம் பாதித்த துருக்கிக்கு அனுப்புகிறது இந்தியா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.