துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கித் தவித்த கர்ப்பிணிக்கு.. ஆண் குழந்தை பிறந்தது!

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தில் சிக்கிக் கொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அந்த இடிபாடுகளுக்கு இடையே பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அந்த இடத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் பிரசவத்திற்குப் பின்னர் இறந்து விட்டார்.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக இதுவரை 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமான வீடுகள் தரைமட்டமாகி விட்டன.

இந்த நிலையில் அலெப்போ நகரில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு கட்டட இடிபாடுகளில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். சம்பவ இடத்திலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அந்த இடத்திலேயே மிகவும் சிரமப்பட்டு அவர் பிரசவிக்க மீட்புப் படையினர் உதவினர். அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதால் மீட்புப் படையினர் பெரும் சோகமடைந்தனர்.

அந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையுடன் மீட்புப்படையைச் சேர்ந்த ஒருவர் தூக்கிக் கொண்டு ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பெரும் துயருக்கு மத்தியில் சிக்கியுள்ள தங்களுக்கு கிடைத்த நம்பிக்கை நட்சத்திரமாக அந்தக் குழந்தை தற்போது துருக்கி மக்களால் பார்க்கப்படுகிறது.

துருக்கியில் தொடர்ந்து விட்டு விட்டு இதுவரை 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.