நியமனம் சார்ந்த வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்!நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா!

வழக்கறிஞர் விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு, எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதற்கு பிறகு இன்றைய தினம் பதவியேற்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
image
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று வழக்கறிஞர்கள் சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், விக்டோரியா கௌரி கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை பேசியிருக்கிறார், எனவே அவரை நீதிபதியாக நியமிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு முதலில் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமே அவசரமாக பட்டியல் இடப்பட்டிருந்தது. முதலில் 9.15 மணிக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், நீதிபதிகள் வர தாமதமானதால் 10.30 மணிக்கு பட்டியலிடப்பட்டது. வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.
image
விக்டோரியா கௌரி நீதிபதியாக பதவியேற்பது தொடர்பான அவரது தகுதிகளை ஆராய வேண்டி உள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பவர்கள், நீதிபதியாக பதவியேற்க கூடாது என்பது அடிப்படைத் தகுதி. ஆனால் இந்த தகுதி கூட விக்டோரியா கௌரி அவர்களுக்கு இல்லை என காரசாரமாக வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றத்திற்காக ஒருவரை நீதிபதியாக நியமிக்கும் போது, கொலிஜியம் அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளிடமிருந்து கருத்துக்களை கேட்பார்கள், அந்த கருத்துக்களும் கொலிஜியம் அமைப்பால் ஆராயப்படும். ஆனால் நீங்கள் சொல்லக்கூடிய இந்த குற்றச்சாட்டுகள் அந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமல் இருந்திருக்குமா. எனினும் பல்வேறு விஷயங்களையும் ஆராய்ந்து தான் கொலிஜியம் தங்களது பரிந்துரையை வழங்கி உள்ளது என தெரிவித்தனர்.
நான் மாணவனாக இருந்த பொழுது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருக்கிறேன். ஆனால் நீதிபதியாக எனது அரசியல் பார்வையை நான் இதுவரை வெளிவரவிட்டதில்லை, அதை விக்டோரியா கௌரி அவர்களுக்கும் பொருத்தலாம் தானே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
image
அதற்கு வழக்கு இடைப்பட்ட தரப்பில் இருந்து, அரசியல் தளத்தில் இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட பலரது பெயர்களை பட்டியலிட்ட மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன். பிரச்சனை விக்டோரியா கௌரி அரசியல் பின்புலம் கொண்டவர் என்பது அல்ல, மாறாக அவர் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை பேசியவர். அவர் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்திருக்கிறார் என்பதுதான் முக்கிய காரணம் என எதிர்வாதம் வைத்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தற்போதைய சூழலில் நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. கொலிஜியம் அமைப்பிற்கு எங்களால் உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் தர இயலாது. அதே நேரத்தில் தற்பொழுது விக்டோரியா கௌரி, தற்காலிக நீதிபதியாக தான் இருக்கின்றார். அவர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பொழுது, அதற்கு முன்பாக ஒரு வருடத்திற்கு அவருடைய செயல்பாடுகள் கொலிஜியம் அமைப்பால் ஆராயப்படும் எனக்கூறி வழக்கை விசாரிக்க மறுத்து உத்தரவிட்டனர். இதற்கான காரணங்கள் பின்னர் விரிவாக வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
image
இந்நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.