படிப்பை விற்காதீர்கள்: தனுஷ்

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள படம் வாத்தி. இதில் தனுசுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, சசிகுமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன், இளவரசு, ஹரிஷ் பெரடி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். வருகிற 17ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் புரமோசன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த புரமோஷன் நிகழ்வில் தனுஷ் பேசியதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் எந்த வேலையும் இல்லாமல் மன உளைச்சலில் இருந்தபோது இந்த கதையை கேட்டேன். கேட்டதுமே பிடித்து விட்டது. ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படம் 1990 காலகட்டத்தில் நடக்குற ஒரு கதை. படத்தில் “படிப்ப பிரசாதம் மாதிரி கொடுங்க, 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி விக்காதிங்க”ன்னு என்று ஒரு வசனம் வரும். அதுதான் படத்தின் மையக்கரு. பள்ளியில் படிக்கும்போது பெற்றோர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தி விடுவார்கள் என்று கவனமின்றி சுற்றி வந்தேன். என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போது தான் அந்தக் கஷ்டம் தெரிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் படிப்பு மிகவும் அவசியமானது.

எண்ணம்போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள். அது தான் உங்களைக் காப்பாற்றும். நான் என்னை சரிசெய்து கொள்ள முயற்சித்து வருகிறேன். இதுவரை என்ன செய்தோம், இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன். அதற்குத் தான் சன்யாசி மாதிரி தாடி வைத்துச் சுற்றுகிறேன்.

இவ்வாறு தனுஷ் பேசிக் கொண்டிருக்கும்போது மாணவர்கள் வடசென்னை இரண்டாம் பாகத்தின் அப்டேட் கேட்டார்கள். அதற்கு தனுஷ் “அதை வெற்றிமாறன் அலுவலகம் முன்பு சென்று கேளுங்கள். எப்போ நடக்கும் என்று தெரியவில்லை. ஆனா, கண்டிப்பாக அது நடக்கும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.