பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் முறையே பிப். 3, 4 ஆகிய தேதிகளில் நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக காலை 8.45 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் சாமி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு தெப்ப தேர் உற்சவம் துவங்கியது. தெப்ப குளத்தின் நடுவில் வள்ளி தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடாந்து மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி தெப்பக்குளத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைந்தது. தைப்பூச திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முதல் மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு மீண்டும் தொடங்கியது. தைபூச திருவிழாவையொட்டி சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர்.