கராச்சி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல், கராச்சியில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் கல்லறையில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷாரப், 79, ‘அமிலாய்டோசிஸ்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 5ம் தேதி உயிரிழந்தார்.
தேசத் துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட பர்வேஸ் முஷாரப், மருத்துவ சிகிச்சைக்காக 2016ல் துபாய் சென்றார்.
அதன் பின் அவர் பாக்., திரும்பவில்லை. தேசத்துரோக வழக்கில், பாக்., நீதிமன்றம் 2019ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் சிறப்பு விமானம் வாயிலாக, முஷாரப்பின் உடல் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானின் கராச்சி வந்தடைந்தது. இங்கு, மாலிர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள குல்மொஹர் போலோ மைதானத்தில் அவரது இறுதி சடங்கு நேற்று மதியம் நடந்தது.
இதில், முஷாரப்பின் உறவினர்கள், முன்னாள், இந்நாள் ராணுவ உயர் அதிகாரிகள், மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாக்., அதிபர் மற்றும் பிரதமர் பங்கேற்கவில்லை.
கராச்சியில் உள்ள பழைய ராணுவ கல்லறையில் பர்வேஸ் முஷாரப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் முன்னாள், இந்நாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உயிரிழந்தால், அந்நாட்டு பார்லி.,யில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.
பாக்., செனட் சபையில் முஷாரப்புக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக உறுப்பினர்கள் மத்தியில் நேற்று முன்தினம் கடும் வாக்குவாதம் எழுந்தது. பலர் அஞ்சலி செலுத்த மறுத்ததை அடுத்து, சபையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்