தானே, மஹாராஷ்டிராவில், போக்குவரத்து நிறுவன உரிமையாளரிடம், இணைய வழி குற்றவாளிகள் ௭௫ ஆயிரம் ரூபாயை சுருட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
‘க்யூ.ஆர்., கோடு’
இங்கு, தானே நகரில், வாகன போக்குவரத்து நிறுவனம் நடத்தி வரும் ௬௦ வயது நபருக்கு, சமீபத்தில் மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர், தான் ஒரு ராணுவ அதிகாரி என்றும், மும்பை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாதுக்கு மருந்துகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு, ௫௦ ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.
இது பற்றி தன் மூத்த அதிகாரி ஒருவர் நாளை பேசுவார் எனக் கூறிய அந்த நபர் அழைப்பை துண்டித்துவிட்டார்.
மறுநாள் மூத்த அதிகாரி என ஒருவர் பேசி, பணம் செலுத்துவதற்கு முன் வங்கி கணக்கை சரிபார்க்க, தன் கணக்கிற்கு வெறும் ௫ ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதன்படி, உரிமையாளரும் ௫ ரூபாய் அனுப்பியுள்ளார். பின், ௧௦ ரூபாயை திருப்பி அனுப்பிய அந்த நபர், ௫௦ ஆயிரம் ரூபாய் கட்டணத்தை ‘க்யூ.ஆர்., கோடு’ வழியாக எடுக்கச் சொல்லிஉள்ளார்.
ஏமாற்றம்
உரிமையாளர் அப்படி செய்த போது, அவரது வங்கி கணக்கில் இருந்து ௭௫ ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த உரிமையாளர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து, இணையதளம் வாயிலாக பணத்தை சுருட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்